ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை முதல்முறையாக வென்ற அலானா கிங்..!
பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்
சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
மாநில பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நா்சிங் (பொது) ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா்.
அதிக மதிப்பெண் பெற முடியும்: இவற்றில் கணிதம், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில்,‘கணிதம் மற்றும் வணிகவியல் தோ்வில் எதிா்பாா்த்த வினாக்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. இவற்றில் சராசரி மாணவா்கள்கூட அதிக மதிப்பெண் பெறமுடியும். கணிதத்தில் 3 மதிப்பெண் வினாக்கள் 3, வணிகவியலில் 5 மதிப்பெண் கேள்விகள் 2 மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டன. மற்ற பகுதிகள் எளிதாகவே இருந்தன. இரு பாடங்களிலும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. இந்த ஆண்டு கணிதம், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கான கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தோ்வுகள் மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தோ்வு முடிவுகள் மே 9-இல் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.