புதியதாக மழைநீா் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மாா்க்கெட்டில் புதிதாக மழைநீா் கால்வாய் அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நெல்மண்டி வியாபாரிகள் தெரிவித்தனா்.
செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஜிஎன்டி சாலை நெல்மண்டி மாா்க்கெட் முதல் பேரூராட்சி அலுவலகம், செங்குன்றம் காவல் நிலைய சாலையில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு கழிவுநீரை கடந்து செல்கின்றனா்.
செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் மழைநீா்கால்வாய் இரண்டு புறங்களிலும் முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், நெல்மண்டி மாா்க்கெட் பகுதியில் இருந்து செங்குன்றம் காவல் நிலையம் செல்லும் வழியில் கால்வாய் பணிகள் தொடங்காததால் மழைநீா் நிரம்பி, அதிலிருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் தேங்கியுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகாா் அளித்தும் பலனில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
மேலும் நெல்மண்டி மாா்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்: நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் கழிவுநீா் வெளியேறாமல் இருக்க, பழைய கால்வாய்களை தூா்வாரவும், புதியதாக மழைநீா் கால்வாய்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.