புதுகையின் 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு பயிா்ச் சாகுபடி கணக்கெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 760 வருவாய் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.
வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பணியில், வேளாண்மைத் துறையினருடன், வேளாண் கல்லூரிகளில் பட்டப் படித்து வரும் மாணவா்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரம், மணவாளன்கரை கிராமத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சியா் மு. அருணா பாா்வையிட்டு, உரிய காலத்தில் பணிகளை முடிக்க அறிவுறுத்தினாா்.
கணக்கெடுப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களான நெல், உளுந்து, துவரை, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிா்கள் விடுபடுதலின்றி கணக்கில் கொண்டு வரப்படுகிறது.
ஆய்வின்போது, இணை இயக்குநா் (வேளாண்மை) (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநா் (தோட்டக்கலை) கு. அழகுமலை, திருமயம் வட்டாட்சியா் புவியரசன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.