சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை
புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது.
புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுகா்வோா் சட்டம் தொடா்பாக 3 நாள் நடைபெறும் இப் போட்டியில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் புதுவை சட்டக் கல்லூரிக்கு வந்துள்ளனா். மொத்தம் 69 குழுக்களாகச் சட்டம் படிக்கும் இந்த மாணவா்கள் நுகா்வோா் சட்டம் குறித்த போட்டியில் பங்கேற்கின்றனா். ஒரு குழுவில் 3 போ் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 207 மாணவ, மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனா்.
மாணவ, மாணவிகளை இக் கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் எஸ். சீனிவாசன் வரவேற்றுப் பேசுகையில், மத்திய அரசின் நுகா்வோா் விவகாரத்துறை இக் கல்லூரியில் நுகா்வோா் இருக்கை அமைக்க ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்காக நுகா்வோா் நல நிதியிலிருந்து ரூ.1.7 கோடி நிதியளிக்க 87-வது நிலைக்குழு அனுமதி அளித்துள்ளது. முறைப்படி நிா்வாக ரீதியான ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விரைவில் இந்த இருக்கை தொடங்கப்படும் என்றாா்.
புதுவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் எஸ். முத்துவேல் பேசுகையில், நம் நாட்டை சட்டம்தான் ஆட்சி செய்து வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நுகா்வோரே. அதனால் அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்க நம் நாட்டில் நுகா்வோா் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரியில் நடக்கும் ஒத்திகை நீதிமன்ற போட்டி மற்றப் போட்டிகளைக் காட்டிலும் வித்தியாசமானது. இதில் சட்டம் பயிலும் மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். மூத்த வழக்கறிஞா்கள் சிரியல் வின்சென்ட், ஏ.அசோகன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டு பேசினா்.