பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும் என திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற 'விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100-க்கு 100 வெற்றியை நாம் பெற்றோம். அதே போன்ற வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற்றாக வேண்டும். வரும் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறோம். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதை நினைத்துக்கொண்டு மெத்தனமாகவும் இருந்துவிடக் கூடாது. அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது.
மக்களை சந்தித்து நம்முடைய கொள்கைகளை, சாதனைகளைச் சொல்லுங்கள். நம்முடைய ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவதொரு வகையில் பயன்பெறும்படி நம்முடைய திட்டங்கள் அமைந்திருக்கிறது. அதை மக்கள் எளிமையாகப் புரிந்து கொள்வது மாதிரி துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும்; தெருமுனைக் கூட்டங்கள், திண்ணைப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் மற்றும் மகளிரைக் திமுகவை நோக்கி ஈர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள்.
நேற்றுகூட, கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இளைஞர் அணி சார்பில் நடத்தப்பட்ட "என் உயிரினும் மேலான" பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பேச்சாளர்கள் பங்கெடுத்து இருந்தார்கள். இந்தப் போட்டியில் பங்கேற்ற பேச்சாளர்களைப் பயன்படுத்தி நீங்கள் கூட்டங்கள் நடத்த வேண்டும். மாதம் ஒரு சிறு கூட்டம் போதும். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை!
அதேபோல், மகளிருக்காக ஏராளமான திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம். பெண்கள் ஆதரவை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு பெண் வாக்காளரையும் தேர்தலுக்கு முன்பாக மூன்று முறையாவது சந்திக்க வேண்டும் என்கிற அசைன்மெண்ட் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் திமுக பெண் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் சென்று பார்க்கும்போது மகளிருக்கு என்று செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நோட்டீஸாக அடித்து வழங்கச் சொல்லுங்கள். நம்முடைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் நம்முடைய வேலை.
சென்னை: அடுத்த 2 மணி நேரம் பலத்த மழைக்கு வாய்ப்பு!
இங்கு வந்திருக்கும் நிர்வாகிகள் பல்வேறு தொழில்கள் செய்கிறவர்களாக இருப்பீர்கள். உங்களின் வேலையில் கவனம் செலுத்துவது போன்றே, உங்கள் குடும்பத்துக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் நேரம் ஒதுக்கிச் செலவிடுங்கள். உங்கள் பணிகளுக்கிடையே ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரத்தைக் கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கட்சிப் பணிக்கு ஒதுக்குங்கள்.
உங்களுக்கு நான் நிர்ணயித்துள்ள இலக்கு எவ்வளவு? 200. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையா உழைக்க வேண்டும். வேட்பாளர் யார் என்று தலைமைக் கழகம் அறிவிக்கும். வெற்றி பெறுபவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனவே, திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரைச் சட்டமன்றத்துக்கு அனுப்ப உழைக்க வேண்டியது உங்கள் கடமை.
ஏழாவது முறை ஆட்சி அமைக்க விருதுநகரில் இருக்கும் ஏழு தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி எனக்கு வர வேண்டும் என்றார்.