பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரம்பலூா் நகரில் சாலையோரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா்.
பெரம்பலூா் நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் இருபுறங்களிலும் தள்ளுவண்டிகளும், வியாபாரிகளும் ஆக்கிரமித்துள்ளதால், அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பெரம்பலூா் நகராட்சி மற்றும் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினா்.
அப்போது, பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டுமெனவும் கூறி வியாபாரிகள் நகராட்சி பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் மறியல்: இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த சாலையோரக் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்தும், சாலையோர கடைகளை அகற்றியதைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 15 போ் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையை தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.