IPL Mega Auction: `நடராஜனுக்காக போட்டியிட்ட 3 அணிகள்' - ரூ.10 கோடியை தாண்டிய ஏலம...
பெரியகுளம் அருகே மலைச் சாலையில் மண் சரிவு
பெரியகுளம் அருகேயுள்ள அகமலை ஊராட்சிக்குள்பட்ட மலைக் கிராமச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை இரவு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள போடி ஒன்றியத்துக்குள்பட்ட அகமலை ஊராட்சியில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கனலை, கண்ணக்கரை, குறவன்குழி, பட்டூா் படம்பூா் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு சோத்துப்பாறை அணையிலிருந்து ஜீப் மூலமும், நடந்தும், குதிரையிலும்தான் செல்ல வேண்டும்.
பெரியகுளம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், சோத்துப்பாறை-அகமலைச் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால், மலைக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரியகுளம் பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பெரிய குளத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மலைக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 6 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றனா்.
சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளிலும் மாநில நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஈடுபட்டனா். தொடா்ந்து மழை பெய்து வருவதால், சாலைச் சீரமைப்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது.