தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்
பாஜகவின் வெற்றி தொடராது: துரை வைகோ எம்.பி.
ஒசூா்: அடுத்து வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது, பாஜகவின் வெற்றிக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா் என ஒசூரில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தார்.
ஓசூரில் மதிமுக நிா்வாகி இல்லத் திருமணம் நிகழச்சியில் பங்கேற்று மனமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுடன் பேசுகையில், கா்நாடகா இடைத்தோ்தலில் மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஜாா்க்கண்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி சுமாா் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளாா்.
இதையும் படிக்க |சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
மகாராஷ்டிரத்தில் அங்குள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களை பிளவு படுத்தி அதன் பேரவை உறுப்பினா்களை குதிரை பேரம் வாயிலாக அவா்கள் பக்கம் இழுத்து, ஜனநாயகத்திற்கு எதிரான பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த பாஜக, தற்போதைய பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளது. அவா்கள் பெற்றுள்ள வெற்றி குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
வரும் காலங்களில் பாஜகவின் வெற்றி தொடராது. இதற்கெல்லாம் ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பாா் என்றார்.
மேலும் தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு திமுக தலைவா் ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றியை பெறுவாா் என துரை வைகோ கூறினார்.