போதையில் லாரி ஓட்டிய கிளீனர்; சாலையோரம் துங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்!
கேரள மாநிலம், திருச்சூர் நாட்டிக பகுதியில் சாலை ஓரத்தில் நாடோடி பழங்குடிகள் குழுவைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட சுமார் 10 பேர் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது கண்ணூரில் இருந்து கொச்சிக்கு மரத்தடி கொண்டு சென்ற லாரி, நாடோடிக் குழுவினர் மீது ஏறி இறங்கிச் சென்றதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் மரணமடைந்த சம்பவம், இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. லாரி மோதிய குழுவைச் சேர்ந்த ஒருவர் சத்தம்போட்டுக்கொண்டே வந்ததை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விரட்டிச் சென்று லாரியை மடக்கினர். பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். மரத்தடிகளை ஏற்றிவந்த அந்த லாரியை கிளீனர் ஓட்டிச்சென்றதாகவும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், "நாடோடிக் குழுவைச் சேர்ந்தவர்கள் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ஆறுவழிச் சாலை பணிகள் நடைபெற்றுவருகின்றன. வாகனம் செல்லக் கூடாது என போர்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாலை சுமார் 4 மணியளவில் மிக வேகமாக வந்த லாரி மக்கள் தூங்கிக்கொண்டிருந்த பகுதியில் சென்று அவர்கள் மீது ஏறி இறங்கிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் 2 குழந்தைகள் உள்ப்பட 5 பேர் மரணம் அடைந்தனர். ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அதில் மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காளியப்பன்(50), ஜீவன்(4), நாகம்மாள்(39), பம்காளி(20) மற்றும் ஒரு வயதே ஆன விஸ்வா என்ற குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
சாலை ஓரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிச் சென்ற லாரி நிற்காமல் சென்றது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சேர்ந்து லாரியை மடக்கி பிடித்தனர். லாரியை டிரைவர் ஓட்டவில்லை. லாரி கிளீனரான கண்ணூர் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (33) மதுபோதையில் அதிவேகத்தில் லாரியை ஓட்டிச்சென்றுள்ளார். லாரி கிளீனர் அலெக்ஸ் மற்றும் டிரைவர் ஜோஸ்(54) ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.