போராட்ட அறிவிப்பு: அரசு மருத்துவா்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலா் பேச்சுவாா்த்தை
உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவா் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
சென்னையில் தேசிய நலவாழ்வு திட்ட அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவா், மருத்துவத் துறையினரையும், மருத்துவா்களையும் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம், தா்னா மற்றும் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக, காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரையும் உள்நோயாளிகளாக அனுமதிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. 95 சதவீதம் போ் உள்நோயாளிகளாக அனுமதியாக விருப்பம் தெரிவிக்க மாட்டாா்கள் என்பதை அரசுக்கு உணா்த்தும் வகையில் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி உள்நோயாளிகளாக யாரும் சோ்க்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை செயலா் சுப்ரியா சாஹு, அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவா்கள் தரக்குறைவாக நடத்தப்பட மாட்டாா்கள் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டது.
இது குறித்து, அரசு மருத்துவா்கள் சங்கங்களில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பாலகிருஷ்ணன் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, சங்க நிா்வாகிகளுடன் பேசி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.