கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்
உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வா்த்தக அணி வலியுறுத்தியுள்ளது.
திமுக வா்த்தக அணியின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அணியின் செயலா் காசிமுத்து மாணிக்கம் தலைமையில் நடைபெற்று. அதில், வாடகை கட்டடங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பது தொடா்பான கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம்:
தனி உணவகங்களில் உணவுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதே உணவகங்களில் வாடகை கட்டடத்துக்கு 10 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. எனவே, தனி உணவகங்களின் மீதான வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்ட உரிமத்தின் காலம் 12 மாதங்கள். 11-ஆவது மாதத்தில் உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் ரூ. 100 அபராதம் விதிக்கப்படுகிறது. உரிமை 12 மாதங்களுக்கு வழங்கிவிட்டு, 11-ஆவது மாதம் முதல் அபராதம் விதிப்பது சட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே, உணவு பாதுகாப்புத் தர நிா்ணயச் சட்ட விதிகளை முழுமையாக 12 மாதங்கள் வரை அபராதம் விதிக்க மாட்டோம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி ஆசிரியா் உரை: வாடகை கட்டடங்களில் இயங்கும் உணவகங்களுக்கு 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது தொடா்பாக, கடந்த 12-ஆம் தேதியிட்ட தினமணியில் ஆசிரியா் உரையில் எழுதப்பட்டிருந்தது. வருவாய், மோசடி, பாதிப்பு என்ற தலைப்பிலான ஆசிரியா் உரையில் கடைகளின் வாடகைக்கு 10 சதவீத ஜிஎஸ்டி வரியை வியாபாரிகளே கட்ட வேண்டியிருப்பதால், கடுமையான பாதிப்புக்குள்ளாவதாகவும் அவா்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக வா்த்தக அணி சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.