`கூட்டணி துணையின்றி திமுக ஆட்சி சாத்தியமில்லை' - கே.பாலகிருஷ்ணன் பேச்சும் பின்னண...
மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ - அதிர்ச்சியில் ராஜ் தாக்கரே
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனியாக 120 தொகுதியில் போட்டியிட்டது. ஆரம்பத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட முயன்றது. ஆனால் பா.ஜ.க கூட்டணியில் ஏற்கனவே மூன்று கட்சிகள் இருந்ததால் ராஜ் தாக்கரே கட்சியை சேர்க்க மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே பா.ஜ.க-வுக்கு ஆதரவாக மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போட்டியிடாமல் பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அப்படி ஆதரவு கொடுத்தும் சட்டமன்ற தேர்தலில் நவநிர்மாண் சேனாவை தங்களது கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க மறுத்துவிட்டது. இதனால் ராஜ் தாக்கரே தனது கட்சி சார்பாக 120 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார். அக்கட்சி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இம்முறை ராஜ் தாக்கரே தனது மகன் அமித் தாக்கரேயை மாகிம் தொகுதியில் நிறுத்தினார். அமித் தாக்கரேயின் வெற்றிக்கு உதவ பா.ஜ.க முன் வந்தது. இதற்காக அத்தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த சதா சர்வான்கரிடம் போட்டியில் இருந்து விலகும்படி பா.ஜ.க கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் போட்டியில் இருந்துவிலக மறுத்துவிட்டார். இதனால் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா சார்பாக போட்டியிட்ட மகேஷ் சாவந்த் இத்தேர்தலில் வெற்றி பெற்றார். அமித் தாக்கரே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இத்தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் அமித் தாக்கரேயின் அரசியல் வாழ்வுக்கு உத்தவ் தாக்கரே தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். கல்யான் ரூரல் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற நவநிர்மாண் சேனா வேட்பாளர் ராஜு பாட்டீல் இம்முறை தோல்வியை தழுவினார்.
இதனால் ராஜ் தாக்கரேயின் வேட்பாளர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர். ஆனால் ராஜ்தாக்கரே தேர்தலில் மராத்தி மக்களின் வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். மும்பையில் ராஜ் தாக்கரே கட்சி வேட்பாளர்கள் 14 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெற்று இருக்கின்றனர். மும்பை சிவ்ரி தொகுதியில் ராஜ் தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்ட பாலா நந்த்காவ்கர் 7140 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். காட்கோபர் மேற்கு தொகுதியில் ராஜ்தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்ட கணேஷ் 25 ஆயிரம் வாக்குகள் பெற்றார். ஆனால் உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக போட்டியிட்ட சஞ்சய் பாலேராவ் வெறும் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அனுசக்தி நகரில் போட்டியிட்ட ராஜ்தாக்கரே கட்சி வேட்பாளர் நவீன் ஆசாரியா 28 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
மகாவிகாஷ் அகாடி சார்பாக போட்டியிட்ட பஹத் அகமத் 3378 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். மாநிலம் முழுவதும் நவநிர்மாண் சேனாவிற்கு 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்திருக்கிறது. இதனால் ராஜ் தாக்கரே கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து தொடர்ந்து இருக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மாநில கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் சட்டமன்ற தேர்தலில் 6 சதவீத வாக்குகள் மற்றும் 2 எம்.எல்.ஏ இருக்கவேண்டும். ஆனால் ராஜ்தாக்கரே கட்சிக்கு இரண்டுமே இல்லை. இதனால் ராஜ் தாக்கரேயிடம் ரயில் எஞ்சின் சின்னம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் சுனாமியில் ரயில் எஞ்சின் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
இதே போன்று பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். அவர்களும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர். இத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களாக பாலாசாஹேப் தோரட், முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக், சிவசேனாவின் சஞ்சய் நிரூபம், யாமினி ஜாதவ் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.
அதேசமயம் சிவசேனா(உத்தவ்) சார்பாக 25 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தலில் மொத்தம் 420 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பா.ஜ.க தனது கட்சி வேட்பாளர்கள் 17 பேரை போட்டியிட வைத்தது. அவர்களில் 9 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...