Sarfaraz Khan: 'முதலில் அவரைத் தோற்க விடுங்கள்..!' - சர்பராஸ் கானுக்கு கங்குலி ஆ...
மகாராஷ்டிரா: `மீண்டும் ஒரு வாய்ப்பு..!’ - 50 ஆண்டு செல்வாக்கை மீட்பாரா அசோக் சவான்?
நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பல தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது.
இத்தேர்தலில் பல அரசியல் வாரிசுகள் களம் காண்கின்றனர். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.கவில் சேர்ந்தார். அவருக்கு பா.ஜ.க ராஜ்ய சபை உறுப்பினர் பதவி கொடுத்திருக்கிறது. ஊழல் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக அசோக் சவான் பா.ஜ.க.வில் சேர்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதோடு பா.ஜ.கவில் சேர்ந்ததன் மூலம் சொந்த ஊரான நாண்டெட்டில் அசோக் சவான் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே அசோக் சவானின் ஆதரவு இருந்தபோதும் நாண்டெட் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் தோல்வியை சந்தித்தார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வசந்த்ராவ் சவான் எதிர்பாராத விதமாக காலமாகிவிட்டார். இதனால் அத்தொகுதிக்கு சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வசந்த்ராவ் சவான் மகன் ரவீந்திர சவான் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் அசோக் சவானை மீண்டும் நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் தனது மகள் போட்டியிடுவதால் தானும் போட்டியிடுவது சரியாக இருக்காது என்று கூறி அசோக் சவான் போட்டியிட மறுத்துவிட்டார்.
தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நாண்டெட் மக்களவை தொகுதியில் தனது செல்வாக்கை நிரூபித்துக்காட்ட அசோக் சவானுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாராமதி தொகுதியை சரத்பவார் குடும்பம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் அசோக் சவான் குடும்பமும் 50 ஆண்டுகளாக நாண்டெட் தொகுதியை தங்களது குடும்ப தொகுதியாகத்தான் வைத்திருந்தனர்.
அசோக்சவானின் தந்தையான முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவான் காலத்தில் இருந்து நாண்டெட்டில் அசோக்சவான் சவான் குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படிப்பட்ட பாரம்பரிய நாண்டெட் மக்களவை தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அசோக்சவான் தோல்வியடைந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் இதே தொகுதியில் தோல்வி அடைந்திருப்பதால் இப்போது அதே தொகுதியில் பா.ஜ.க பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெறச்செய்யவேண்டிய நிலையில் அசோக் சவான் இருக்கிறார்.
அதே போன்று சட்டமன்ற தேர்தலில் நாண்டெட் மாவட்டத்தில் அதிகப்படியான தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து தனது செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டிய நிலையில் அசோக் சவான் இருக்கிறார். அதோடு தனது மகளையும் வெற்றி பெறச்செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். அசோக் சவான் மகள் ஸ்ரீஜெயா இம்முறை போகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னை, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றால் ஸ்ரீஜெயா தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார்.
அதே போன்று நாண்டெட் மாவட்டத்தில் உள்ள தெக்லுர் தொகுதியில் அசோக் சவானின் தீவிர ஆதரவாளரான ஜிதேஷ் அந்தாபுர்கர் போட்டியிடுகிறார். மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிதேஷ் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடனே அவர் பா.ஜ.கவில் சேர்ந்து போட்டியிடுகிறார். இதே போன்று இம்மாவட்டத்தில் இருக்கும் முகேட், நைகாவ் ஆகிய தொகுதியிலும் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-சிவசேனா கூட்டணி நாண்டெட்டில் மொத்தமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 4 தொகுதியில் வெற்றி பெற்றது. நாண்டெட் மாவட்டத்தில் 50 சதவீத மக்கள் மராத்தா இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இம்முறை மராத்தா இட ஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி வந்த மனோஜ் ஜராங்கே தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக குறிப்பிட்டு இருந்தார். பா.ஜ.க தலைவர்கள் தொடர்ச்சியாக மனோஜ் ஜராங்கேயை சந்தித்து பேசினர். அதனால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் முடிவை கைவிட்டுள்ளார். அவ்வாறு வேட்பாளர்களை நிறுத்தி இருந்தால் அது பா.ஜ.கவிற்கு மேலும் பின்னடைவாக அமைந்திருக்கும்.!