Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்... முடிவுக்கு வந்த இழுபறி..!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர் விஜய் ரூபானி சட்டமன்றத் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரை முன்மொழிந்தார். அதனை கட்சியின் மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார் மற்றும் பங்கஜா முண்டே ஆகியோர் பா.ஜ.க சட்டமன்றத் தலைவர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் பெயரை வழிமொழிந்தார். அவர்களது முடிவுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதனையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் புதிய பா.ஜ.க சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை மாலை 5 மணிக்கு மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் விழாவில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார். இன்று காலையில் தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜ.க சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து மஹாயுதி தலைவர்களாக அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகின்றனர்.
தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கெனவே இரண்டு முறை முதல்வராக இருந்தார். தற்போது, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்கிறார். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு திடீரென அதிகாலையில் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அப்பதவி ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போதும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 132 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஏக்நாத் ஷிண்டே தயக்கம் காட்டி வந்தார். ஆனால் இறுதியில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அப்படி இருந்தும் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அதோடு முதல்வர் யார் என்பது குறித்து தெரிவிக்காமல் பா.ஜ.க மர்மமாக வைத்திருந்தது. நாளை அமைச்சரவை பதவியேற்கும் போது துணை முதல்வர்களாக அஜித்பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.