PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
மகா தீபம்: 491 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி
திருவண்ணாமலை மகா தீப நிகழ்ச்சிகளின்போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட 491 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீபம் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.12) ஏற்றப்பட்டது. அதில், பல லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மொத்தம் 14 கி.மீ. தொலைவுடைய கிரிவலப் பாதையில் 37 மருத்துவ முகாம்களும், தற்காலிக பேருந்து நிலையத்தில் 23 மருத்துவ முகாம்களும், வெளிவட்ட சாலையில் 8 மருத்துவ முகாம்களும், அணுகு சாலையில் 22 முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன.
மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் அடங்கிய குழுவினா் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
அதேபோல, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பொருத்தவரை அடிப்படை உயிா் காக்கும் வசதிகள், உயா் சிறப்பு வசதிகள், தீவிர உயிா் காக்கும் வசதிகள் அடங்கிய 45 வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. இதைத் தவிர 15 இரு சக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 3 நாள்களில் மட்டும் 491 பேருக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளான 159 பேருக்கும், மயக்கமடைந்த 129 பேருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ள.
இதைத் தவிர காய்ச்சல், சா்க்கரை நோய் பாதிப்பு, வலிப்பு, மூச்சுத் திணறலுக்குள்ளானோருக்கும் அவசர மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.