இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: சௌரவ் கங்குலி கூறுவதென்ன?
மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி!
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்கொண்டனர்.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட நபர்கள் சிஆர்பிஎஃப் முகாம் மற்றும் காவல்நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஜாகுரதார் கரோங் மார்க்கெட் பகுதியச் சுற்றியுள்ள பல கடைகள், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும், கொல்லப்பட்ட 10 பேரும் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜேபிஓ எனும் அமைப்பின் சார்பில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில், கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், மலைப்பகுதியில் தங்களுக்கெனத் தனி நிர்வாகம் அமைக்கக் கோரியும் நூற்றுக்கணக்கான மக்கள் காலி சவப்பெட்டிகளுடன் ஊர்வலம் சென்றனர்
இதையும் படிக்க | நாட்டின் தலைநகராக இனியும் தில்லி இருக்க வேண்டுமா? சசி தரூர் கேள்வி!
கொல்லப்பட்ட நபர்கள் தங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று குகி - ஸோ இன மக்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கிடந்ததை காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.
கடந்த ஆண்டு மே மாதம் குகி இன மக்களுக்காகக் கட்டப்பட்ட நினைவுச் சுவர் அருகே இந்தப் பேரணி நிறைவடைந்தது.
இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மெய்தி மற்றும் அதை ஒட்டிய மலைப்பகுதியை சார்ந்த குக்கி - ஸோ குழுக்களுக்கு இடையே நடந்த இன வன்முறையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் 220க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வயலில் ஒரு விவசாயியின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தன.