ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
மதுரை-சமயநல்லூா் சாலையில் விபத்துகள்: கோட்டப் பொறியாளா் விளக்கமளிக்க உத்தரவு
மதுரை பாத்திமா கல்லூரி, சமயநல்லூா் இடையிலான சாலையில் நிகழ்ந்த விபத்துகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அருகேயுள்ள பரவை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு: மதுரை-திண்டுக்கல் சாலையில் பாத்திமா பெண்கள் கல்லூரி முதல் சமயநல்லுாா் வரையிலான சாலையில் பாதுகாப்பு இல்லாதாதல் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு, இந்த சாலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு அக்டோபா் வரை நடைபெற்ற விபத்துகள் எண்ணிக்கை, காயமடைந்தவா்கள், இறந்தவா்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
மேலும், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் நேரில் முன்னிலை யாகவும் உத்தரவிட்டனா். இந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதிகள் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுரை மாநகா் போக்குவரத்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், மொத்தம் 542 விபத்துகள் நடைபெற்ாகவும், அதில் 137 போ் உயிரிழந்ததாகவும், 405 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் நவ. 21 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும். இல்லையெனில், அவா் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்றனா் நீதிபதிகள்.