விவாகரத்தும் விருதும்... ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஒரே வாரத்தில்!!
ஆடுஜீவிதம் திரைப்படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படத்தை பிளஸ்ஸி ஐப் தாமஸ் இயக்கியிருந்தார். பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் கவனம்பெற்ற நாவலை நல்ல சினிமாவாகவே மாற்றியிருந்தனர். இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது.
குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் ஆன்மாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுக்கு (HMMA) ஆடுஜீவிதம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இன்டிபென்டென்ட் ஃபிலிம் (Foreign Language) பிரிவில் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சார்பாக, அவருக்கு பதில் ஆடுஜீவிதம் படத்தின் இயக்குநர் பிளஸ்ஸி விருதினைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவ. 19) ஏ. ஆர். ரஹ்மானும், அவரது மனைவியும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்த நிலையில், அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜி. வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் சைந்தவி!