இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது
பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபாராணி (65). இவருக்கு மேற்கண்ட கிராமத்தில் 5.61 ஏக்கர் நிலம் உள்ளது. இவருக்கு வனிதா உள்பட 4 மகள்கள் உள்ளனர். இதற்கிடையில் வனிதாவை ஆந்திரத்தைச் சேர்ந்த சந்தகாரிமுன்னா என்பவர், காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இவர் வனிதாவை கொடுமைப்படுத்தியதையடுத்து, ஷோபாராணி கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2.71 ஏக்கர் நிலத்தை சந்தகாரிமுன்னாவுக்கு செட்டில்மெண்ட் செய்து கொடுத்துள்ளார். பின்னர் வனிதா பெயருக்கு நிலம் மாற்றப்பட்டது.
இதற்கிடையில் சந்தகாரிமுன்னா சித்தரவதையால் வனிதா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வனிதா பெயரில் உள்ள நிலத்துக்குண்டான அனைத்து அசல் ஆவணங்களும் சந்தகாரிமுன்னா கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. வனிதா இறந்த பிறகு, குழந்தைகளை சந்தகாரிமுன்னா ஷோபாராணியிடம் விட்டு விட்டு சென்றாராம். இதற்கிடையில், வனிதா இறக்கும் முன்பு குடும்ப மருத்துவர் மோகன்குமார் என்பவரிடம், தனது சொத்து விவரங்கள், குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டி ஷோபாராணி பெயரில் உயில் ஆவணத்தையும் ஒப்படைத்துள்ளார்.
கடந்த 2024- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷோபாராணி, வனிதா கொடுத்த உயிலை சென்னை உயர்நீதிமன்றத்தில் சரிபார்க்க கொடுத்துள்ளார். மேலும், அவர் வனிதாவின் பெயரில் இருந்த நிலத்தை சந்தகாரிமுன்னா விற்பனை செய்துள்ளாரா என தெரிந்து கொள்ள இணையதளம் மூலமாகவும், சார்-பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தார். அப்போது பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வனிதா பெயரில் இருந்த நிலம், பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்காத போதும், ஷோபாராணி பேரில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் விசாரித்த போது, தனது (ஷோபாராணி) பெயரில் பட்டா மாற்றம் செய்ய சரவணபிரகாஷ் என்பவரிடம் சந்தகாரிமுன்னா பணம் கொடுத்து ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்தது. மேற்கண்ட நிலத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடமானம் வைத்து ரூ. 75 லட்சம் பணத்தை சந்தகாரிமுன்னா பெற்றுள்ளார்.
மோசடி செய்த மேற்கண்ட சொத்தின் மதிப்பு ரூ. 15 கோடி எனக் கூறப்படுகிறது. இது குறித்து ஷோபாராணி ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த 9-ஆம் தேதி புகார் செய்தார்.
போலி ஆவணத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சந்தகாரிமுன்னாவை (38) (படம்) போலீஸார் கைது செய்தனர்.