அமரன் குழுவுக்கு ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மாணவர்!
அமரன் படக்குழுவுக்கு ரூ. 1.10 கோடி இழப்பீடு கேட்டு பொறியியல் மாணவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் 25 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இதுவரை ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க : அமரன்: வெண்ணிலவு சாரல் நீ விடியோ பாடல்!
இந்த நிலையில், அமரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட செல்போன் எண்ணால் பொறியியல் மாணவர் பிரச்னையில் சிக்கியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஒரு துண்டுச் சீட்டில் செல்போன் எண்ணை எழுதி தூக்கி வீசுவது போன்ற காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியில் செல்போன் எண்ணும் காட்டப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், திரையில் காட்டப்பட்ட செல்போன் எண்ணுக்கு சொந்தமான பொறியியல் மாணவர் வாகீசனை தொடர்பு கொண்டு ரசிகர்கள் தொந்தரவு செய்து வருவதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து தனது எண்ணுக்கு போன் வந்து கொண்டிருப்பதாகவும், அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக கடக்க முடியவில்லை என்றும் வாகீசன் தெரிவித்துள்ளார்.
வெளியில் செல்வதற்கு காரை முன்பதிவு செய்யக் கூட இயலாதவாறு தொடர்ந்து போன் வருவதாகவும், சரியாக படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், படக்குழுவினரை குறிப்பிட்டு, ரசிகர்களின் தொந்தரவுக்காக எனது செல்போனை மாற்ற முடியாது, ஆதார் அட்டை, வங்கி, படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்துக்கு இந்த எண் கொடுக்கப்பட்டுள்ளதால், படத்தில் தெரியும் எண்ணை மறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நஷ்டஈடாக ரூ. ஒரு கோடி பத்து லட்சம் கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் படக்குழுவினருக்கு வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.