செய்திகள் :

`மனநல பாதிப்பு; 13 வருடங்களை தொலைத்த நபர்' - மீட்டு, குணமாக்கி பெற்றோரிடம் ஒப்படைத்த தஞ்சை க்லெக்டர்

post image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் தனிகவனம் செலுத்துகிறார். அவர்களை மீட்டு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, மறுவாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டை அக்கறையுடன் முன்னெடுக்கிறார். தான் பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்றபோது சாலையில் கண்ணில்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, சம்பந்தப்பட்ட துறை மூலமாக மீட்டு மறு வாழ்வு பெற செய்கிறார். இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த கலெக்டர் பிரியங்கா

ஒரு மாதத்திற்கு முன்பு பூதலூர் தாலுகாவில் ஆய்வு பணி மேற்கொண்டார், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா. அப்போது பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் உள்ள புதுப்பட்டியில் 40 வயதுமிக்க நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பேசும் நிலையில் இல்லை. இதையடுத்து, `வாழ வேண்டிய வயசில் வீட்டை விட்டுட்டு சாலையில் திரிகிற அளவுக்கு என்ன பிரச்னையோ' என்று கலங்கியிருக்கிறார்.

அத்துடன் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி உதவியுடன் அந்த நபரை மீட்டு தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் செயல்படும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீட்பு மையத்தில் சேர்த்தார்.

மீட்பு மையத்தில் அலுவலர்களும் அந்த நபருக்கு வேண்டிய சிகிச்சையை கொடுத்துள்ளனர். தனக்கு இருக்கும் பிஸியான வேலைக்கு மத்தியில் அவ்வப்போது அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார்.

கலெக்டரால் மீட்கப்பட்ட போது

இந்தநிலையில் அந்த நபர் மனநிலை சரியாகி மீண்டுள்ளார். இதையடுத்து கலெக்டர் அவர் எந்த ஊர் என்கிற விவரத்தை கேட்க சொல்ல, அந்த நபர் தன்னுடைய விவரங்களைச் சொல்லியிருக்கிறார். இதில் அவரது பெயர் குஜல்லா பிரசாத், ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், அம்மாவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதை போலீஸார் மூலமாகவும் உறுதி செய்து கொண்டார். பின்னர் குஜல்லா பிரசாத்திடம் மாவட்ட ஆட்சியர் பேசியதில், ``13 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன், சாலைகள் செல்கின்ற தூரம் வரை நடந்தேன். சோறு கிடைக்குற இடத்தில் தின்னுட்டு தெருவோரத்தில் இருப்பேன். இப்படியே என் வாழ்க்கை ஓடி விட்டது.

என்னோட அப்பா நமஞ்சி நெய்லூ, அம்மா நூரசம்மாவை பாக்கணும்... அவங்களோட சேர்ந்து மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழணும், அதுக்கு வாய்ப்பிருக்கானு தெரியலை" என்று கலங்கியிருக்கிறார். `கவலைப்படாதீங்க நான் உங்களை அப்பா, அம்மாக்கிட்ட சேர்த்து வைக்கிறேன்' என்று சொன்ன ஆட்சியர், அதற்கான முன்னெடுப்புகளை உடனே செய்தார். பின்னர் பெற்றோர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க செய்து போனில் அவர்களிடம் பேசியிருக்கிறார். ``எங்க பிள்ளை இருக்கானா, இல்லையா... என்ன ஆனான் என எதுவும் தெரியாம 13 வருஷமா துடிச்சிக்கிட்டிருந்தோம்" எனக் கதறியவர்கள், உடனே தஞ்சாவூருக்குப் புறப்பட்டனர்.

குஜல்லா பிரசாத்தை பெற்றோரிடம் ஒப்படைக்கும் கலெக்டர்

இதையடுத்து இன்று தஞ்சாவூரில் குஜல்லா பிரசாத்தை பெற்றோரிடத்தில் ஒப்படைத்தார் கலெக்டர் பிரியங்கா. மகனை பார்த்ததும் பெற்றோர், தாவியணைத்து கட்டிக்கொள்ள அங்கிருந்த அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர். இத்தனை வருடங்களுக்கு பிறகு மகனை தங்களிடம் சேர்த்த கலெக்டரை, கையெடுத்து கும்பிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா

``தொலைந்த என்னோட வாழ்க்கை உங்க மூலம் திரும்ப கிடைச்சிருக்கு" என்று கலெக்டரிடம் கண்ணீரில் நன்றி சொன்ன குஜல்லாவிடம், ``எதற்கும் கலங்கிடாம வலிமையோடு மிச்சமிருக்குற வாழ்க்கையை மகிழ்ச்சியா வாழணும்" என இனிப்பு, புது துணி கொடுத்து வாழ்த்தி அனுப்பிவைத்தார் கலெக்டர் பிரியங்கா.

ஈரோடு: ``5 தலைமுறைகளைக் கண்ட 100 வயது தம்பதிக்கு கனக அபிஷேக விழா..'' உறவினர்கள் நெகிழ்ச்சி!

நவீன உலகில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் நிலையில் ஈரோடு அருகே உறவினர்கள் ஒன்றுகூடி 100 வயதைக் கடந்த தங்களது தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்து ஆசி பெற்றனர்.ஈரோடு அர... மேலும் பார்க்க