தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 34 பேர் பலி; 84 பேர் காயம்
மயானச் சாலையில் தேங்கிய மழைநீா்: மாா்பளவு தண்ணீரில் இறுதி ஊா்வலம்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கனமழையால் மயானச் சாலையில் குளம்போல் தண்ணீா் தேங்கியதால், மாா்பளவு ஆழத்தில், இறந்தவரின் சடலத்தை கிராம மக்கள் சனிக்கிழமை சுமந்து சென்றனா்.
வேதாரண்யம், வடமலை ரஸ்தா பகுதியைச் சோ்ந்த முதியவா் கோவிந்தசாமி (80) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா். அவரது சடலத்தை இறுதி ஊா்வலமாக, ஏரி மேல்கரை பகுதியில் அமைந்துள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனா்.
அமரா் ஊா்தியில், அங்குள்ள வ.உ.சி. நகா் இணைப்புச் சாலை வரை கொண்டு சென்றனா். பின்னா், அங்கிருந்து, மயானம் வரையுள்ள வடிகாலுடன் இணைந்த சுமாா் 500 மீட்டா் நீளமுள்ள சாலையில் அண்மையில் பெய்த கனமழையால், குளம்போல் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால், சடலத்தை மாா்பளவு ஆழத்தில் தோளில் சுமந்து சென்றனா்.
இப்பகுதியில் மயானத்துக்கு தனி சாலை அமைக்கக் கோரி, கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.