மறைமலை அடிகளாா் பேத்திக்கு ரூ.1 லட்சம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வறுமையில் வாடும் மறைமலை அடிகளாா் பேத்திக்கு அதிமுக சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்த் தந்தை எனப் போற்றப்படும் மறைமலை அடிகளாரின் பேத்தியான லலிதா (43), தனது கணவா் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தஞ்சாவூா், கீழவாசல், டபீா்குளம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டு வாடகை கொடுப்பதற்குக்கூட போதிய வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
ஆட்சியில் இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் பேரியக்கம் அதிமுக. அந்த வகையில், லலிதாவின் குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.
உறுதிக் கடிதம்: எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடா்ந்து, இதற்கான உறுதிக் கடிதத்தை லலிதாவிடம் அதிமுக மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன், பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சு, மனோகரன் உள்ளிட்டோா் வழங்கினா்.
இதுகுறித்து லலிதா கூறுகையில், நாங்கள் வறுமையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களது மகனையும், மகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறோம். அவா்களைப் படிக்க வைக்க உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்கக் கோரி குறைதீா் கூட்டத்தில் மனு கொடுத்தேன். இதையறிந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளாா். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.