சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
"மாநாடு முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்" - 'பந்தல்' சிவா பேட்டி
இன்னும் சில மாதங்களே இருக்கின்றன 2026 சட்டசபைத் தேர்தலுக்கு. தேர்தல் வந்தால் மாநாடு, பொதுக்கூட்டம், பிரசாரம் என அரசியல் கட்சிகள் பிசியாகி விடுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கட்சிகளுடன் சேர்ந்து இன்னொரு முக்கியமான மனிதரும் தமிழ்நாட்டில் பிசியாகி விடுகிறார்.
முக்கியமான மனிதர் எனச் சொல்வதற்குக் காரணம் ஒரேநேரத்தில் மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் பாராட்டு பெற்றவர் அவர். காங்கிரஸுடனும் தொடர்பில் இருப்பார். பாரதிய ஜனதாவுடனும் நட்பு பாராட்டுவார். இன்றைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ எனக் கட்சி வேறுபாடின்றி தலைவர்களுக்குப் பரிச்சயமானவர் அவர்.

'எதிரும் புதிருமான கட்சித் தலைவர்களுடன் எப்படி ஒருவர் தமிழ் நாட்டில் நட்பு பாராட்ட முடியும்' என்ற கேள்வியுடன் அவர் முன் போய் அமர்ந்தோம்.
''ஆமாங்க, எனக்கே சில நேரம் இது ஆச்சரியத்தை தரும். ஆனா ஐம்பது வருஷம் கடந்துட்ட என்னுடைய பயணத்துல எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் பார்த்துட்டேன். இன்னைக்கும் என் பேரைச் சொன்னா கட்சி பேதமின்றி எல்லாருக்கும் தெரியும். எல்லோரும் எங்கூட நல்ல நட்பிலிருக்காங்க" என்றபடி உரையாடத் தொடங்கினார் 'பந்தல்' சிவா.
தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியின் மாநாடு என்றாலும் பிரமாண்டமான பந்தலை உருவாக்குபவர். தாத்தா, அப்பாவுக்கு அடுத்து தொழிலைக் கவனித்து வந்தவர். தற்போது நான்காவது தலைமுறையாக மகளையும் இதில் இறக்கி விட்டிருக்கிறார்.
''திருவாரூர் மாவட்டம் வடுவூர் எங்க கிராமம். தென்னை ஓலையில் பத்தே பத்து அடியில ரெண்டு சவுக்குக் கம்பை ஊன்றி அதுல பத்து கீத்தைப் போட்டு இந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கார் எங்க தாத்தா. அந்தக் காலத்துல கூட்டுக் குடும்பமா இருந்ததால் வீட்டு ஆளுங்க எல்லாரும் ஒத்தாசையா இருந்திருக்காங்க. அப்பா காலத்துல கொஞ்சம் ஆள் வச்சுப் பார்த்தார்.

எனக்கோ கல்லூரி காலத்துலயே இந்தத் தொழில் மீது ஈர்ப்பு வந்திச்சு. நான் தொழில்ல இறங்கினப்ப 80 அடிக்கு காலே இல்லாம பந்தல் போடற அளவுக்கு வளர்ந்திருந்தது எங்க கம்பெனி. என்னுடைய சகோதரி மகன் சந்திரசேகர், என்னுடைய மகள்கள் யாஷினி, நந்தினி, என்னுடைய மனைவி எல்லாருமே பழைய அதே கூட்டுக்குடும்ப மரபுப்படி தொழில்ல எனக்கு உதவியா இருக்கறதால இன்னைக்கு 171 அடியில் காலே இல்லாத பந்தல் அமைச்சிருக்கோம்.
பத்து லட்சம் பேர் வரை திரண்ட மாநாட்டுப் பந்தலையெல்லாம் கூட அமைச்சிருக்கோம். எல்ல்லாம் கடவுள் அருள்'' என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம்.
எதிரும் புதிருமான தமிழக அரசியல் சூழலில் எப்படி எல்லோருடனும் இணைந்து வேலை செய்ய முடிகிறது?
''ரொம்ப சிம்பிள்ங்க. ஒரு கட்சிக்கு வேலை செய்யற இடத்துல நடக்கறது பத்தி இன்னொரு இடத்துல மூச்சு கூட விட மாட்டேன். தவிர வேலை முடியறவரைக்கும் வேலை தர்றவங்கதான் எனக்கு எஜமான். இன்னும் எளிமையா சொல்லணும்னா நான் ஒரு மாநாட்டு பந்தல் அமைக்கிறேன்னா அந்த வேலை முடியற வரைக்கும் அந்தக் கட்சியின் தொண்டனாவே மாறிடுவேன்.

அதிமுக கட்சிக்கு வேலை செய்யறேனா, அப்ப அதிமுக காரன். விஜய்காந்த்தின் முதல் மாநாடு மதுரையில் நடந்தப்ப அவர் எங்கிட்ட 'நீங்க எந்தக் கட்சி'னு கேட்டுட்டார். நாளைக்கு வரைக்கும் அதாவது மாநாடு முடியற வரைக்கும் உங்க கட்சினு சொன்னதும் சிரிச்சிட்டார். வைகோ தனிக்கட்சி தொடங்கினப்ப முதல் மாநாடும் நம்ம போட்டதுதான்.
மேலே சொன்ன என்னுடைய பாலிசியில சமரசம் செஞ்சுக்காம இருக்கறதாலதான் ஜெயலலிதா ஆட்சியில் தஞ்சை உலகத் தமிழ் மாநாடு, கலைஞர் ஆட்சியில் கோவை செம்மொழி மாநாடுனு எல்லாத்தையும் என்னால பண்ண முடிஞ்சது. விஜயகாந்த்தும் எனக்கு மோதிரம் அணிவிச்சிருக்கார். இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணித் தலைவரா இருந்தப்பவே எனக்கு தங்கச் செயின் அணிவிச்சிருக்கார்."
உங்க அனுபவத்துல சொல்லுங்க. மாநாடு நடத்துவதில் 'கில்லி'ன்னா யாரைச் சொல்வீங்க?
''எல்லா கட்சிகளுமே பிரமாண்டமாத்தான் மாநாடு நடத்தணும்னு விரும்புவாங்க. ஆனாலும் பெரிய கட்சிகளுக்குச் சாத்தியமாகுற சில விஷயங்கள் சின்னச் சின்னக் கட்சிகளுக்குச் சாத்தியமாகுறதில்லை. திமுக தலைவர் கலைஞர், கே.என். நேருவை ரொம்பவே புகழ்வார். 'மாநாடுன்னா நேருதான்யா'னு சொல்வார்.

எ.வ.வேலு திட்டமிடுவதில் வல்லவர். எவ்வளவு பேர் உட்காரணும், எத்தனை இருக்கைகள் தேவை, குடிநீர், கழிவறை வசதி எப்படி இருக்கணும்? நிலத்தின் அளவு, ஜெனரேட்டர்னு எல்லா விஷயத்தையும் அவர் கவனிப்பார்.
அந்த மாதிரி திமுகவுல நிறையப் பேர் இருக்காங்க. ஒரு மாநாடு நடக்குதுன்னா உள்கட்டமைப்பு வசதிகள் மீது எந்தளவு கவனமா இருக்கணுமோ அதுக்குச் சரி சமமா கூட்டத்தை அதாவது வர்ற தொண்டர்களைக் கட்டுப்பாட்டுல வைக்கறதுலயும் கவனம் இருக்கணும். அதுக்கு மாநாட்டை நடத்தறவங்க அல்லது அதுக்குப் பொறூப்பானவங்களா இருக்கிறவங்க நல்ல லீடர்ஷிப் உடையவங்களா இருக்கணும்.
ஏன்னா கூட்டத்துக்குப் பலதரப்பட்டவங்க வருவாங்க. சிலர் கட்டுப்படவே மாட்டாங்க. அந்த இடத்துல அவங்களைச் சமாளிக்கணும். எல்லாத்தையும் கட்சித் தலைவரே பார்த்துக்கிட்டிருக்க முடியாது. திமுக கூட்டங்கள்ல தொண்டர்கள் ஏதாவது அலம்பல் பண்ணினா அமைச்சர் சேகர் பாப வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு முன்னாடி வந்தார்னா அடங்கிடுவாங்க.
அதிமுகவுலயும் அப்படியான ஆட்கள் நிறையவே இருக்காங்க. இந்த இரண்டு கட்சிகளுமே மாநாடு, கூட்டங்கள் நடத்தறதுல ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்லை.

''இப்பெல்லாம் மாநாட்டில் காலி சேர்களைப் படம்பிடிச்சு காட்டறது அடிக்கடி நடக்குதே. இது பத்தி.."
''நான் முன்னாடி சொன்னதுதான். எந்தக் கட்சி மாநாடு குறித்த தகவலையும் நான் அடுத்த கட்சிக்காரங்க கிட்ட மட்டுமல்ல, பொதுவெளியிலயும் பேச மாட்டேன். அது நம்ம பாக்குற தொழிலுக்கு விரோதமானதுனு நினைக்கிறேன். நீங்க சொன்ன இந்த காலி சேர் விவகாரமெல்லாம் அரசியல். என்னைப் பொறுத்தவரை எந்தக் கட்சின்னாலும் நாங்க மாநாடு போட்டா கூட்டம் நிரம்பி வழியணும்னுதான் ஆசைப்படுவோம்''
பந்தல் அமைக்குற இந்தத் தொழிலில் போட்டிகள் இல்லையா?
''எங்களைப் போலவே இன்னும் நாலஞ்சு பேரு இருக்காங்க. அவங்கவங்க திறமைக்கேற்ப வேலை கிடைக்கும். எங்க நிறுவனம் நாலாவது தலைமுறையா இதுல ஈடுபடுது. புதுபுது டெக்னாலஜியை தொழில்ல பயன்படுத்த ஆர்வம் காட்டி வர்றோம்.

இந்த நேரத்துல அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்க விரும்புறேன். இந்தத் தொழிலும் ஒரு கலைதான். அதனால இதுல ஈடுபடுறவங்களுக்கும் கலைமாமணி போன்ற விருதுகளைக் கொடுத்து அங்கீகரிக்கணும்''
"அரசியல் மாநாடுகளின்போது நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களால் பெரிய விபத்துகள் ஏதும் தமிழ்நாட்டில் இதற்கு முன் நடந்துள்ளதா?"
''என் அனுபவத்துல அது மாதிரி கேள்விப்படலை. மாநாட்டுக்கு வந்து திரும்புற வழியில விபத்துகள்ல சிக்கினவங்க பத்தின செய்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சமீபத்துல கரூர் அரசியல் பேரணியில நடந்தது பெரிய துயரம்.
அது மாநாடு இல்லாட்டியும் அரசியல் கூட்டம்கிற வகையில் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. இத்தனைக்கும் எனக்கும் அந்தக் கூட்டத்துக்கும் தொடர்பு இல்லைதான். ஆனாலும் கேள்விப்பட்டதுல இருந்து மூணு ராத்திரி தூங்க முடியலை.

நான் அரசியல் பேச விரும்பறதில்லை. ஆனா ரெண்டு விஷயம் சொல்லலாம்னு நினைக்கிறேன். ஒரு மாநாடுன்னு முதல்ல சரியான திட்டமிடல் இருக்கணும். ஏனோ தானோனு நடத்தக்கூடாது.
மனித உயிர்கள் இல்லையா, அதனுடைய மதிப்பு தெரியணும். இரண்டாவது தொண்டர்களைக் கட்டுப்படுத்தற தலைவர்கள் எல்லாக் கட்சியிலும் அவசியம் இருக்கணும்'' என்று பேசி முடித்தார்.















