மாளிகை கடை டு போதைப் பொருள் கடத்தல்; தனி சாம்ராஜ்யம் - யார் இந்த செந்தில்?
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவின் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக பதிவு நம்பரைக் கொண்ட கன்டெய்னர் லாரியை மடக்கிய தனிப்படை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிக்குள் மூட்டை, மூட்டையாக போதைப்பொருள்கள் இருந்தன. இதையடுத்து லாரி டிரைவர் திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் ஆகியோரையும் கன்டெய்னர் லாரியையும் நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு தனிப்படை போலீசார் கொண்டு சென்றனர். அதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து தனிப்படை போலீசாரிடம் பேசினோம். ``குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை தமிழகத்தில் விற்க தடை உள்ளது. ஆனால் அந்தத் தடையை மீறி சிலர் அத்தகைய போதைப் பொருள்களை விற்று வருகிறார்கள். கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு தடை இல்லை. அதனால் அங்கிருந்து சிலர், வாங்கி வந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் விற்று வருகின்றனர். அதுதொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்டெய்னர் லாரியை சோதனை செய்தோம். அப்போது அந்த லாரிக்குள் ஆறரை டன் எடையுள்ள போதைப் பொருள்கள் இருந்தன. அதை கர்நாடகாவிலிருந்து சென்னைக்குக் கடத்தி வந்த டிரைவர் விக்னேஷ், க்ளீனர் குமார் ஆகியோரைக் கைது செய்தோம். அவர்களிடம் விசாரித்தபோது சென்னை ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம் என்கிற செந்திலுக்கு இந்தப் போதைப் பொருளைக் கொண்டு சென்ற தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து கனகலிங்கம் என்கிற செந்திலைப் பிடித்து விசாரித்தோம். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை வாங்கி கன்டெய்னர் மூலம் சென்னைக்குக் கடத்தி வருவது உறுதியானது. மேலும் இவர், கடந்த செப்டம்பர் மாதம்தான் குட்கா கடத்திய வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்ற தகவலும் கிடைத்தது. அதனால் செந்திலையும் கைது செய்து சிறையில் அடைத்தோம். இவர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தியதாக 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பூந்தமல்லி குட்கா வழக்கில் சிறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். வந்தவுடன் மீண்டும் கர்நாடகாவிலிருந்து குட்காவைக் கடத்தி வந்திருக்கிறார். அப்போது எங்களிடம் சிக்கிக் கொண்டார்" என்றனர்.
செந்திலின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம். பிழைப்பு தேடி செந்திலின் குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்திருக்கிறது. தாம்பரம் பொழிச்சலூர் பகுதியில் செந்திலின் குடும்பம் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறது. கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த செந்தில், பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் குறுக்கு வழியைத் தேர்வு செய்தார். அப்போது அவரின் கடைக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்ட விரோதமாக சப்ளை செய்த டீமுடன் செந்தில் கைகோத்தார். அதனால் மளிகை கடையிலிருந்து குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்கும் நெட்வொர்க்குடன் சேர்ந்து கர்நாடகாவிலிருந்து எப்படி அவற்றைக் கடத்துவது என்பதைக் கற்றுக்கொண்டார்.
பின்னர் இந்தக் கடத்தலில் தான் மட்டுமே டானாக இருக்க வேண்டும் எனக் கருதிய செந்தில், கடத்தல் கும்பல் நெட்வொர்க் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை சிக்க வைத்தார். அதனால் கர்நாடகாவிலிருந்து குட்கா கடத்தும் சம்பவங்கள் குறையத் தொடங்கின. அதைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட செந்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கர்நாடகாவுக்குச் சென்று அங்கிருந்து கன்டெய்னர் மூலம் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகளைக் கடத்தி வந்து தமிழக பார்டரில் வைத்து டீலர்களுக்கும் சிறிய அளவிலான கடத்தல் கும்பலுக்கும் கைமாற்றி விடத் தொடங்கியிருக்கிறார். அதில் செந்திலுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கத் தொடங்கியது. அதனால் அவரின் லைஃப் ஸ்டைலும் மாறியது. கழுத்தில் பெரிய முறுக்குச் செயின், கையில் கைச் செயின், மோதிரங்கள் என அணிந்துகொண்டு ஆடம்பரமாக வாழத் தொடங்கியிருக்கிறார் செந்தில்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட், கட்டுமானம் பிசினஸில் முதலீடு செய்து சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வரத் தொடங்கியிருக்கிறார். ஆனாலும் செந்தில் குறித்த தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்து அவரை அடிக்கடி பிடித்து சிறையில் அடைத்தோம். அப்போது செந்திலுக்கு ஆஜராக உயர்நீதிமன்றத்திலிருந்து கூட வழக்கறிஞர்கள் வரத் தொடங்கினர். அந்தளவுக்கு பணபலம் மிக்க மனிதராக செந்தில் மாறினார். மேலும் கர்நாடகாவிலிருந்து ஒரு லோடு போதைப் பொருளைக் கடத்தி வந்தால் செந்திலுக்கு லட்சங்களில் லாபம் கிடைக்கும். அதனால் அந்தக் கடத்தலை அவர் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார். சொந்த வீடுகள் செந்திலுக்கு இருந்தாலும் வாடகை வீட்டில் அவர் வசித்து வருகிறார். செந்திலின் சொத்துக்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். விரைவில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.