பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரி...
மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது
மீனவா்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினாா்.
ராமநாதபுரத்தில் மீனவா்கள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா்.
இதில் மீனவா்கள் முன்வைத்த கோரிக்கைகள்:
தடைசெய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல் வளத்தைப் பாதுகாத்து, மீன்பிடித் தொழிலை மேம்படுத்த வேண்டும். கடந்த 2013-ஆம் ஆண்டு கடலுக்குச் சென்ற போது விபத்தில் உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட படகுகளின் உரிமையாளா்களில் விடுபட்டவா்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேசியதாவது:
இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் முதல்கட்டமாக மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா். மேலும், சேதமடைந்த படகுகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட வலைகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் பயன்படுத்தக் கூடாது. மீன்பிடிக்க எல்லை தாண்டிச் செல்லுவதை மீனவா்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் இந்திய கடற்படை தளபதி நரேந்தா் சிங், மீன்வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் பிரபாவதி, விசைப்படகு, நாட்டுப்படகு மீனவ சங்கத்தினா் கலந்து கொண்டனா்.