வடக்கு கலிபோர்னியாவைத் தாக்கிய புயல்! கனமழை, கடும் பனிப்பொழிவு!
AusvInd: 'திணறிய பேட்டர்கள்; காப்பாற்றிய பும்ரா' - பெர்த் டெஸ்ட்டின் முதல் நாள் எப்படியிருந்தது?
கிட்டத்தட்ட ஒரு உலகக்கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்புதான் பார்டர் கவாஸ்கர் தொடரின் மீதும் இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சமீபமாக சுமாராக ஆடி வருவதால் எந்த அணி தங்களின் ஃபார்மை மீட்டெடுத்து ஆதிக்கம் செலுத்தப்போகிறது எனும் ஆர்வமும் இருந்தது. இவற்றுக்கிடையேதான் பெர்த்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியிருந்தது. இன்றைய நாளில் நடந்தவற்றைப் பற்றிய முழுமையான அலசல் இங்கே.
பிட்ச்சில் அசகாயமாக பௌலர்களுக்கு எதுவும் உதவி கிடைக்காது என நம்பி பும்ரா டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ராணா என இரண்டு அறிமுக வீரர்கள் இதன் மூலம் இந்தப் போட்டியுடன் கடந்த 4 போட்டிகளில் மட்டும் 7 வீரர்களை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமாக அணியில் அஷ்வினும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஷ்வின் தவிர்க்கவே முடியாத துருப்புச்சீட்டு. ஆனாலும் அவரை பென்ச்சில் வைத்து விட்டு வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்திருந்தனர். இது ஒரு கேம்ப்ளிங்காகத்தான் பார்க்கப்பட்டது. ஒரு ஸ்பின்னர் போதும் என்பதால் ஜடேஜாவும் அணியில் இல்லை. இதெல்லாம் இந்திய அணி கொடுத்த ஆச்சர்யங்கள்.
பேட்டிங்கிலும் அப்படி ஆச்சர்யப்படும் அளவுக்கு பெர்பார்ம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டிங்கில் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. இந்திய அணியின் பேட்டர்கள் கடுமையாக திணறினர். இத்தனைக்கும் ஆஸ்திரேலிய பௌலர்கள் பெரிதாக எந்த பொறியையும் திட்டமிட்டு செட் செய்தெல்லாம் வீசவில்லை. சுமாராகத்தான் வீசிக்கொண்டிருந்தனர். ஆங்கிள் இன், ஆங்கிள் அவுட்டாக மாற்றி மாற்றி வீச வேண்டும். இடையில் யார்க்கிங் லெந்தில் ஒரு பந்தை இறக்க வேண்டும். இதுதான் ஆஸி பௌலர்களின் திட்டம். மூன்று ஸ்லிப்கள் ஒரு கல்லி, ஷார்ட் லெக் என வைத்து தொடர்ந்து உள்ளேயும் வெளியேயுமாக வீசிக்கொண்டிருந்தனர்.
தற்காப்பின் மீது நம்பிக்கைக் கொள்ளாமல் ஷாட்களை ஆடுவதிலேயே இந்திய வீரர்கள் குறியாக இருந்ததால் ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு சவாலே இல்லை. ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய மண்ணின் தன்மையை உணராமலேயே சந்தித்த 8 வது பந்திலேயே பேட்டை நன்றாக வெளியே விட்டு கவர் ட்ரைவ் ஆட முயன்று கேட்ச் ஆனார். படிக்கல் 22 பந்துகளாக க்ரீஸிலேயே நின்று எட்ஜ் ஆகி வெளியேறினார். எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக வந்த பந்தை லீவ் செய்யும் ஐடியாவே இல்லாமல் தொட்டு கேட்ச் ஆகினார் கோலி. ஸ்டார்க், ஹேசல்வுட் என இருவருமே கட்டுக்கோப்பாக வீசினர். இந்திய அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
'இதே மாதிரியான பிட்ச்களில் முதலில் பௌலர்களின் ஸ்விங்கை மதிப்பேன். அதன்பிறகுதான் இயல்பான ஆட்டத்தை ஆட தொடங்குவேன்.' என வார்னர் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்தார். அதைத்தான் இந்திய பேட்டர்கள் செய்யத் தவறினர். ராகுல் மட்டும்தான் பௌலர்களை மதித்து நின்று ஆடினார். ஆனால், அவராலும் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. ஸ்டார்க்கின் பந்தில் சர்ச்சைக்குரிய வகையில் அவுட் ஆகி வெளியேறினார். 'பும்ரா முதலில் பேட்டிங் எடுத்ததுதான் பிரச்சனையாகியிருந்தது. நாங்களாக இருந்தால் இந்த பிட்ச்சுக்கு பௌலிங்கைதான் முதலில் எடுத்திருப்போம்.' என ஜாம்பவான் பேட்டர்களான கவாஸ்கரும் மேத்யூ ஹேடனும் ஒரு சேர பேசிக்கொண்டிருந்தனர்.
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்திய அணி எடுத்த கொஞ்ச நஞ்ச ரன்களும் ரிஷப் பண்ட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோரால்தான் வந்திருந்தது. இவர்களிடம் தற்காப்பு ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது. ரிஷப் பண்ட் வழக்கம்போல இறங்கி வந்து பௌலரின் தலைக்கு மேல் பந்துகளை பறக்கவிட்டார். நிதிஷ் ரெட்டியும் அணிக்கு தேவையான சில ரன்களை எடுத்துக் கொடுத்திருந்தார். 'நிதிஷ் ராணாவின் திறமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், அவர் எவ்வளவு முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கிறார்? டெஸ்ட்டில் அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என வர்ணனையில் கவாஸ்கர் நிதிஷின் தேர்வை வெளுத்தெடுத்தார். ஆனால், அவரின் விமர்சனங்களுக்கு மாறாக நிதிஷ் ரெட்டிதான் இன்றைக்கு இந்தியா சார்பில் அதிகபட்சமாக 41 ரன்களை சேர்த்திருந்தார். பண்ட் மற்றும் நிதிஷின் ஆட்டத்தால் இந்திய அணி 150 ரன்களை எட்டியது.
இரண்டு செஷன்களோடு இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணியின் பேட்டர்கள் வழக்கம்போல சொதப்பினாலும் பௌலர்களின் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. ஏனெனில், சமீபமாக தோல்விகளின் போது கூட இந்திய பௌலர்கள்தான் அந்த தோல்விகளை கௌரவமான தோல்விகளாக மாற்றி வருகின்றனர். கிட்டத்தட்ட பௌலர்களை மட்டுமேதான் இந்திய அணி முழுமையாக நம்பி களமிறங்குகிறது. அந்த நம்பிக்கையை இன்றைக்கும் இந்திய பௌலர்கள் காப்பாற்றினார். குறிப்பாக, பும்ரா வீசிய முதல் ஸ்பெல் அத்தனை அபாயமானதாக இருந்தது. அவர் வீசிய முதல் 4 ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக்ஸ்வினி, கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் என ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் காலி செய்தார். ஓவர் தி விக்கெட், ரவுண்ட் தி விக்கெட் என மாறி மாறி வந்து ஆங்கிள் இன்னாக சரியாக குட் லெந்தில் கொஞ்சம் முன்னே பின்னே என மாற்றி மாற்றி அவர் வீசிய டெலிவரிக்கள் அத்தனை துல்லியமாக ஸ்டம்ப் லைனை துளைத்தன.
மெக்ஸ்வீனியும் ஸ்மித்தும் Lbw ஆக கவாஜா ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஸ்மித்தெல்லாம் க்ரீஸூக்குள் வந்து சுதாரிக்கக் கூட நேரமில்லை. முதல் பந்திலேயே டக் அவுட். பும்ராவுடன் வீசிய சிராஜூம் ஹர்ஷித் ராணாவுமே அவருக்கு நன்றாக ஒத்துழைத்தனர். ஹர்ஷித் ராணாவுக்கு முதல் போட்டி. ஆனால், முதல் ஓவரையே பதற்றமின்றி மிகச்சிறப்பாக வீசிச் சென்றார். அந்த ஓவரில் லபுஷேனை நிற்க வைத்து ஏறக்குறைய அத்தனை பந்துகளையும் பீட்டன் ஆக செய்தார். லபுஷேன் ராணாவை ஸ்லெட்ஜ்ஜிங்கெல்லாம் செய்தார். ராணா வீசிய அடுத்த ஓவரில் ஹெட் இரண்டு பவுண்டரிகளை அடித்து அட்டாக்கிங் மோடுக்கு மாறினார். ஆனால், அதற்கடுத்த ஓவரிலேயே ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து நல்ல லெந்தில் ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே திருப்பி ஹெட்டை போல்டாக்கி வெளியேற்றினார்.
சிராஜூம் தன் பங்குக்கு டைட்டான லைன் & லெந்த்தில் வீசி லபுஷேன், மிட்செல் மார்ஷ் இருவரையும் காலி செய்தார். பேட்டிங்கில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா கடுமையாக திணறியது. 47 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கம்மின்ஸூம் அலெக்ஸ் கேரியும் சில நிமிடங்களுக்கு தாக்குப்பிடிக்க இன்றைய நாள் முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் பும்ரா மீண்டும் பந்தை கையில் எடுத்தார். கம்மின்ஸை எட்ஜ் ஆக்கி 3 ரன்களில் வெளியேற்றினார். இன்றைய நாள் முடிவதற்குள்ளேயே ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆகிவிடுமோ என தோன்றியது. ஆனால், அது நடக்கவில்லை. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்தியாவுக்கு இன்றைய நாளை இரண்டாக பிரிக்கலாம். முதல் பாதியில் பேட்டிங்கில் இந்தியா கடுமையாக திணறியது. இரண்டாம் பாதியில் பௌலிங்கில் இந்தியா மிரட்டியது. இரண்டாம் பாதி ஆட்டத்தால்தான் இந்தியா இந்தப் போட்டியை கைக்குள் வைத்திருக்கிறது. இந்திய அணியின் பௌலிங் மெச்சத்தகுந்ததுதான். ஆனால், ஒரு அணியாக பார்க்கையில் பேட்டிங்கில் இந்தியா தொடர்ந்து சொதப்புவது பின்னடைவுதான். இந்திய அணி தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தி மீள வேண்டும்.
முதல் நாள் ஆட்டத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.!
நீங்கள் படித்து ரசித்த வேட்டை நாய்கள் தொடர், இப்போது ஆடியோ வடிவில்...