''உணவு மூலமாகவே கேன்சரை வென்றுவிட்டாள் என் மனைவி'' - முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து!
முன்னாள் கிரிக்கெட் வீரர் 'நவ்ஜோத் சிங் சித்து', தன்னுடைய மனைவி நவ்ஜத் கவுர் கேன்சர் நான்காவது நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தார் என்பதை உணர்ச்சிப்பெருக்குடன் சொல்கிற வீடியோதான் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
My wife is clinically cancer free today என்று அவர் பேச ஆரம்பிக்கிற அந்த வீடியோவில், ''இரண்டு வருடங்களுக்கு முன்னால் என் மனைவிக்கு மார்பக புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எத்தனையோ கோடி செலவு செய்து பெரிய பெரிய மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்தோம். ஆனால், மருத்துவர்கள் சொன்னது என்னவோ, 'இவர் பிழைக்க மூன்று சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது' என்பதுதான். என்னுடைய நண்பரின் மகன் அமெரிக்காவில் புற்றுநோய் மருத்துவராக இருக்கிறார். அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார். கடந்த ஏப்ரல் மாதம் என் மனைவிக்கு மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்தளவுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை அது. ஆனால், அவள் தைரியமாக இருந்தாள்.
உணவு மூலமாக என் மனைவிக்கு உதவ முடிவு செய்தோம். என்னுடைய மனைவிக்கு நான் கொடுத்தது வேம்பு இலைகள், கட்டி மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் மட்டும் தான். இவற்றிற்கெல்லாம் எவ்வளவு செலவாகிடப் போகிறது. இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே கேன்சரை குணப்படுத்த முடியும். சில நாள்கள் சர்க்கரை, மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தோம். காலையில் எழுந்தவுடன் முதலில் எலுமிச்சைச் சாறு எடுத்துக்கொண்டு, மாலையில் ஆறு மணிக்கு முன்னரே அன்றைய நாளின் உணவை முடித்துக்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து நாற்பது நாள் செய்தாலே கேன்சரை குணப்படுத்த முடியும், வாழ்க்கை முறையை மாற்றினாலே கேன்சரை குணப்படுத்தி விடலாம். இதை உங்கள் அனைவரிடமும் சொல்வதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்கிறார் நவ்ஜோத் சிங் சித்து.