Aishwarya Lekshmi: `எனக்கு நானே மேட்ரிமோனியலில் புரோபைல் ஓபன் பண்ணினேன்...' - ஐஸ்வர்யா லட்சுமி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை ஐஷ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான `கட்டா குஸ்தி' திரைப்படமும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மலையாளம், தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் வைஷக் இளன்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹலோ மம்மி திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ``நான் சிறுமியாக இருந்தபோது அதாவது, 8, 10 வயதில் திருமணம் குறித்த கனவு எனக்கு இருந்திருக்கிறது. மிகுந்த பக்தியுடன் இருக்கும் என் அம்மாவுடன் குருவாயூர் கோயில் சென்றிருந்தபோது, திருமணங்களை படம் பிடித்திருக்கிறேன். ஆனால், நான் வளர வளர எனக்குள் பல கேள்விகள் எழுந்தது. என்னைச் சுற்றி திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்களில், எனக்குத் தெரிந்து யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் தங்கள் கனவுகள், சுதந்திரத்துடன் சமரசம் செய்துகொண்டு வாழ்வதாகவே உணர்கிறேன். அவர்களில் சிலர் திருமணத்துக்குப் பிறகு பிரிந்துவிடுகிறார்கள்.
அதனால், திருமணம் என்பது கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை அப்படி பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். என் பயணத்தில் நான் தொடர்ந்து வளரவும், அது தொடரவும் சுதந்திரம் மிக முக்கியம். அதனால், திருமண அமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குத் தெரியுமா நான் மேட்ரிமோனியலில் என் புரோஃபைல் ஒன்றை உருவாக்கினேன். என் அம்மா திருமணப் பேச்சை எடுத்தபோது, நானே பணம் கொடுத்து என் திருமணத்துக்கான புரோஃபைலை உருவாக்கினேன். ஆனால், பலரும் அதை நான் என நம்பவே இல்லை. போலி என்றே நினைத்திருக்கிறார்கள்" எனப் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...