மோசமான ஆட்டம்.. ஆஸி. தொடரில் இருந்து நட்சத்திர வீராங்கனை நீக்கம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இருந்து 20 வயதான நட்சத்திர ஆட்டக்காரர் ஷபாலி வர்மா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் ஷபாலி வர்மா ஆறு ஆட்டங்களில் விளையாடி 108 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அணிக்குத் திரும்பிய ஷபாலி வர்மா, டிசம்பரில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் நீக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு அணியில் அறிமுகமான ஷபாலி வர்மா, 2022 ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கைக்கு எதிராக 71 ரன்கள் விளாசினார். அதேத் தொடரில் 49 ரன்கள் விளாசினார்.
அவரைத் தவிர்த்து அஹமதாபாத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் வென்ற அணியில் இருந்த உமா சேத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல், சயாலி சத்காரே ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், மின்னு மணி, டிடாஸ் சாது, பிரியா புனியா ஆகியோருக்கு ஆஸ்திரேலிய தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் பிரிஸ்பேனில் டிசம்பர் 5, 8 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி டிசம்பர் 11 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்திய ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது , அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்குர், சைமா தாக்குர்.