ராமேசுவரத்தில் 50 மீ. உள்வாங்கிய அக்னி தீா்த்தக் கடல்
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் 50 மீ. வரை கடல் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் 50 மீ. வரை கடல் உள்வாங்கியதால், கடலுக்குள் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. மேலும், சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் ராமேசுவரத்துக்கு வருகை தந்தனா். இவா்கள் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், கடல் உள்வாங்கிக் காணப்பட்டதால், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் கடலுக்குள் சென்று அச்சத்துடனேயே நீராடினா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதன் பின்னா், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், ராமா்பாதம், அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் சாலைப் பாலம், ரயில் பாலத்தை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால், ராமேசுவரத்தில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.