ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய லிவர்பூல்..! முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி!
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை லிவர்பூல் அணி வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயன்றும் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி சார்பாக அலெசிஸ் மாக் அலிஸ்டர் 52ஆவது நிமிஷத்திலும் கோடி காக்போ 76ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்பே பெனால்டி வாய்ப்பையும் தவறவிட்டார்.
சாம்பியன் லீக்கில் புதிய விதிகளின்படி லிவர்பூல் அணி 5 போட்டிகளில் 5 வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதன்மூலம் லிவர்பூல் அணி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
12 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி 3ஆவது இடத்திலும் இண்டர் மிலான் 13 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனும் அதிகமுறை (15) பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி மோசமான விளையாட்டால் 24ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர வீரர்களான கார்வாகல், வினிசியஸ் ஜூனியர் காயம் காரணமாக பங்கேற்காததால் எம்பாப்பே-க்கு அழுத்தம் அதிகமாகவே இருந்தது.
சில மாதங்களாகவே மோசமாக விளையாடிவரும் எம்பாப்பே தனது தேசிய அணியான பிரான்சினால் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கழட்டிவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.