ரூ. 3,87,000 வழிப்பறி கொள்ளை; போலீஸில் பொய் புகார்... நாடகம்; நிறுவன ஊழியர் சிக்கியது எப்படி?
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்த வர் பாஸ்கரன் (வயது: 28). பீடி, சிகரெட் பாக்கெட்டுகளை கடைகளுக்கு நேரடியாக சப்ளை செய்யும் நிறுவனத்தில் பாஸ்கரன் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருவதோடு, தினந்தோறும் வசூல் செய்யும் பணத்தை அந்த நிறுவனத்தில் அடுத்த நாள், ஒப்படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 13 - ஆம் தேதி மாலை 5 மணி அளவில், கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பஞ்சபட்டி அருகே உள்ள பூலாம்பட்டி பிரிவு சாலை அருகே ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கரன், தன்னிடம் வைத்திருந்த வசூல் பணம் ரூ.3,87,000 ரொக்க பணத்தை கத்திமுனையில் மிரட்டி பறித்து கொண்டு சென்றுவிட்டதாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, நிறுவனத்திடம் பணத்தை பறி கொடுத்ததுபோல தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவில், குளித்தலை காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் நடத்தி வந்த விசாரணையில், அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்கள், சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும், எவ்விதமான துப்பும் கிடைக்காததால் கடந்த 40 நாள்களுக்கு மேலாக போலீஸார், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிகரெட், பீடி கம்பெனி நிறுவன ஓட்டுநரான பாஸ்கரனை, தனிப்படை போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
அவர்களின் கிடிக்கிப்பிடி விசாரணையில் ஓட்டுநர் பாஸ்கரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி கொள்ளை நாடகத்தை நடத்தியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பாஸ்கரனை கைது செய்து, வழிப்பறி கொள்ளை நாடகத்திற்கு அவருக்கு உடந்தையாக இருந்ததாக கரூர் பாகநத்தத்தைச் சேர்ந்த தன்ராஜ் (22), தமிழரசன் (23), கரூர் தான்தோன்றிமலை வ.உ.சி தெருவைச் சேர்ந்த ரவிக்குமார் (24) உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழிப்பறி கொள்ளை சம்பவத்தின் போது செல்போன் பயன்படுத்தப்படாததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டது. தற்போது சந்தேகத்தின் பெயரில் பாஸ்கரனை கண்காணித்து வலைவிரித்து விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்த போலீஸார், 40 நாட்கள் கடந்த சஸ்பென்ஸூக்கான முடிச்சை அவிழ்த்திருக்கிறார்கள். இதனிடையே, தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டியதோடு, வெகுமதி பரிசும் வழங்கியுள்ளார். தனது கம்பெனி பணத்தை யாரோ வழிப்பறி கொள்ளை செய்ததாக கூறி நாடகம் ஆடிய இளைஞர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.