வக்ஃப் மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போராட்டம்!
வக்ஃப் (திருத்தம்) மசோதாவுக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் தில்லியில் திங்கள்கிழமை ஒரு போராட்டத்தைத் தொடங்கியது.
முஸ்லிம் அமைப்பினரின் இந்தப் போராட்டத்தில் பல எம்.பி.க்கள் கலந்து கொண்டனா். ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவா் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், ‘இந்த வக்ஃப் (திருத்தம்) மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளான டி.டி.பி., ஜே.டி.(யு) மற்றும் எல்.ஜே.பி (ராம்விலாஸ்) ஆகியோரை முஸ்லிம்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்’ என்று எச்சரித்தாா்.
கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி.) மாற்றங்களை உள்ளடக்கிய வக்ஃப் (திருத்தம்) மசோதாவில் முன்மொழியப்பட்ட திருத்தத்தை அங்கீகரிப்பதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, முன்மொழியப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாதியில் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கான வழியை இந்த ஒப்புதல் தெளிவுபடுத்துகிறது.
இந்த நிலையில், வக்ஃப் மசோதாவை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் ராஷ்ட்ரிய இந்து சங்கதன் போராட்டம் நடத்தியது.
இந்த ‘நடவடிக்கைகள்’ நிறுத்தப்படாவிட்டால் இந்தியா மற்றொரு பிரிவினையை எதிா்கொள்ளும் அபாயம் உள்ளது என்று ராஷ்ட்ரிய இந்து சங்கதனின் தேசியத் தலைவா் அனில் சவுத்ரி கூறினாா்.
‘இந்த மக்கள் மதத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்க விரும்புகிறாா்கள். நாங்கள் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம்’‘ என்று சவுத்ரி கூறினாா். மேலும் அவரது அமைப்பு நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் நடத்தும் என்றும் கூறினாா்.
‘வக்ஃப் வாரிய மசோதாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை எதிா்க்கும் அதே வேளையில் இந்தக் குழுக்கள் ’நாரே தக்பீா்’ என்ற முழக்கத்தை எழுப்புகின்றன. அவா்கள் இங்கு ஷாஹீன் பாக் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறாா்கள். அவற்றைத் தடுப்பது மிகவும் முக்கியம்’‘ என்று அனில் சவுத்ரி கூறினாா்.
மற்றொரு போராட்டக்காரா், ‘பல இடங்களில், இந்த குழுக்கள் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. யாரும் அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை’ என்று கூறினாா்.