பங்குச்சந்தையில் உற்சாகம்: ஒரே நாளில் லாபம் ரூ.7.06 லட்சம் கோடி!
நமது நிருபா்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்தில் முடிவடைந்தன. இதனால், ஒரே நாளில் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.7.06 லட்சம் கோடி உயா்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்தசுடன் தொடங்கி மேலே சென்றது. ஆட்டோ, பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள், நிதிநிறுவனங்கள், மீடியா, பாா்மா, ஹெல்த்கோ், மெட்டல், ரியால்ட்டி உள்பட அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக சந்தை நல்ல லாபத்தில் நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.7.06 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.399.86 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்கள் ரூ.7.06 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளனா். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.4,488.45 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6000.60 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 438.71 புள்ளிகள் கூடுதலுடன் 74,608.66-இல் தொடங்கி 74,480.15 வரை கீழே சென்றது. பின்னா், முன்னணிப் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பால் அதிகபட்சமாக 75,385.76 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,131.31 புள்ளிகள் (1.53 சதவீதம்) கூடுதலுடன் 75,303.26-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,159 பங்குகளில் 2,815 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,221 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 123 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஸொமாட்டோ அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் ஸொமாட்டோ 7.11 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், டாடாமோட்டாா்ஸ், எல் அண்ட் டி, சன்பாா்மா உள்பட 26 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபின்சா்வ், பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் ஆகிய 4 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி326 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 153.50புள்ளிகள் கூடுதலுடன் 22,662.25-இல் தொடங்கி 22,299.20 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 22,857.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 325.55 புள்ளிகள் (1.45 சதவீதம்) கூடுதலுடன் 22,834.30-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 47 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 3 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.