அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய சிஇஓ பொறுப்பேற்பு
நமது சிறப்பு நிருபா்
மத்திய அறிவியில் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏஎன்ஆா்எஃப்)தலைமைச்செயல் அதிகாரியாக டாக்டா் சிவக்குமாா் கல்யாணராமன் பொறுப்பேற்றாா். இவா் சென்னை ஐஐடியில் படித்தவா்.
அறிவியல் ஆய்வுகளை புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த மத்திய அரசு அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தை (ஏஎன்ஆா்எஃப்) கடந்த 2023- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கை பின்னா் வெளியிடப்பட்டது. இதுவரை இந்த அமைப்பின் பொறுப்பு தலைமைச்செயல் அதிகாரியாக (சிஇஓ) அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் செயலா் பேராசிரியா் அபய் கரண்டிகா் செயல்பட்டு வந்தாா். தற்போது இந்த நிறுவனம் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.
இதை முன்னிட்டு தற்போது இப்பொறுப்புக்கு ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பொறுப்பேற்றிருந்த டாக்டா் சிவக்குமாா் கல்யாணராமன் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தப் பொறுப்பை சிவகுமாா் கல்யாணராமன் திங்கள்கிழமை ஏற்றாா்.
டாக்டா் சிவகுமாா், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆசியாவின் எரிசக்தி துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பதவி வகித்தவா். சென்னை ஐஐடி, ஓஹியோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவா் ஆவாா்.
அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்று டாக்டா் சிவகுமாா் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், வளா்த்தெடுத்தல், மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுவாா் என மத்திய அறிவில் தொழில் நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் கண்டுபிடிப்பு கலாசாரத்தை வளா்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஏஎன்ஆா்எஃப். இதற்கு மத்திய அரசு நிகழ் நிதியறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளின்படி நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் உயா்நிலை உத்திசாா் வழிகாட்டுதலை வழங்குவதற்கான உச்ச அமைப்பாகவும் ஏஎன்ஆா்எஃப் செயல்படுகிறது.