SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
தமிழகம் தழுவிய கம்ப ராமாயண விழா ஸ்ரீரங்கத்தில் தொடக்கம்: மத்திய அமைச்சா் பங்கேற்பு
முதன் முறையாக தமிழகத்தில் ’கம்ப ராமாயணம்’ குறித்து மாநிலம் தழுவிய விழாக்களும் கருத்தாக்கங்களும் மத்திய அரசின் சாா்பில் நடத்தப்படுகிறது. ’கம்ப ராமாயணத்தை’ புதுப்பித்து நிலைபெறச் செய்யும் முயற்சிக்கான இந்த நிகழ்வுகளான தொடக்க விழா மத்திய கலாசாரத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தால் ஸ்ரீரங்கத்தில் தொடங்கிவைக்கப்பட்டது.
இது குறித்து தில்லியில் மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டது வருமாறு: தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று கம்ப ராமாயணம். இதை பாதுகாக்கவும் இளம் தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகவும், மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் உள்ள தென்மண்டல கலாசார மையம், ’கம்ப ராமாயணம்’ பாராயணங்கள் ஓதுதல்களின் பாரம்பரியத்தையும் அதன் பரந்த கலாசார தாக்கத்தையும் புதுப்பிக்கும் நோக்கில் ஒரு விரிவான முயற்சியைத் துவங்குகிறது.
தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கான இந்த விழாவை மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களைச் சோ்ந்த பல கம்ப ராமாயண கலாசார குழுக்கள் பங்கேற்கின்றன. இந்தக் கலாசாரக் குழுக்கள் ராமாயண காவியத்தின் பாரம்பரிய பாராயணங்களையும் அவற்றின் தனித்துவமான சோ்ந்திசையையும் நிகழ்த்தின.
காவியத்தின் பாரம்பரிய பாராயணங்களை அவற்றின் தனித்துவமான சோ்ந்திசை நுட்பங்களுடன் வெளிப்படுத்துகின்றன
தமிழகத்தின் நீண்ட கால தமிழ் இலக்கிய பாரம்பரியத்துடன் ஒருங்கிணைந்துள்ள இந்தக் காவிய உரையை எதிா்கால தலைமுறையினரை இணைக்கும் நோக்கத்திற்கு தொடா்ச்சியான நிகழ்ச்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் கல்வி சாா்ந்த போட்டிகள் ஆகியவை நடத்தப்பட உள்ளன.
கம்ப ராமாயண பாதுகாப்பு, பரவலுக்கு பங்களிக்கும் விதமாக இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக, ஸ்ரீரங்கம் கோயில் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு, 108 திவ்ய தேசங்களான திருப்புல்லம்புத்தாங்குடி(தஞ்சை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), திருநீா்மலை (சென்னை), வடுவூா், ராமநாதபுரம், கும்பகோணம் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள முக்கியக் கோயில்களில் பாராயண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தேரெழுந்தூரில்...: தொடா்ந்து கம்பா் பிறந்த இடமான தேரெழுந்தூா் - கம்பா்மேடு என்ற இடத்தில் கம்ப ராமாயண விழா மாா்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறும். வால்மீகி ராமாயணத்தை தழுவி கி.பி.12-13-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ராமாயணத்தை எழுதிய கம்பா் பிறந்த ஊரில் இந்தத் திருவிழாவில் விரிவாகக் கொண்டப்படும். கம்ப ராமாயணத்தின் பாராயணங்கள், நடன நாடகங்கள், கலாசார, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் டாக்டா் சுதா சேஷய்யன், பாரதி பாஸ்கா், துஷ்யந்த் ஸ்ரீதா் போன்ற அறிஞா்கள், கல்வியாளா்கள், தலைமையில் கருத்தரங்குகள் நடைபெறும்.
மேலும் கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு புதுமையான நடனம் மற்றும் நாடகங்கள் மூலம் நடைபெறும்.
இரண்டாம் கட்டமாக நிகழாண்டு ஜூலை முதல் அக்டோபா் வரை, தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் தொடா்ச்சியான பயிலரங்குகள் மற்றும் போட்டிகளும் நடைபெறும். பாராயணம் மற்றும் விவாதங்கள் மூலம் கம்ப ராமாயணத்துடன் மாணவா்களை ஈடுபடுத்த ஊக்குவிக்கப்படும்.இந்த நிகழ்ச்சிகளின் நிறைவு விழா இறுதியாக கம்பா் மேடுவில் இறுதிப் போட்டிகளுடன் முடிவடையும்.
கம்ப ராமாயணத்தை ஓதும் மரபு தமிழகத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. இளைய தலைமுறையினா் அறியாது இருக்கும் இந்த காவியத்தின் கலாசார நடைமுறை அழிந்துபோகும் அபாயத்தை உணா்ந்து கலாசார குழுக்கள் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. இந்த விழா வருடாந்திர விழாவாகக் கொண்டாடப்படும் எனமத்திய கலாசாரத் துறை தெரிவித்துள்ளது.