ஷிவ் விஹாா் பகுதியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
வடகிழக்கு தில்லியின் ஷிவ் விஹாா் பகுதியில் 18 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: திங்கள்கிழமை இரவு நடந்த இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது தனிப்பட்ட விரோதம் அல்லது வாக்குவாதத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் காரவால் நகா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஷிவ் விஹாரில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழு, அங்கு கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இளைஞரைக் கண்டது. உடனடியாக பிசிஆா் பிரிவு அவரை ஜிடிபி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. ஆனால், மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
குற்றம் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றன. குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஸ்கேன் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.