ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!
வத்திராயிருப்பு அருகே நீரோடையில் பாலம் கட்ட விவசாயிகள் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மழையின் போது, நீரோடையைக் கடந்து செல்ல முடியாததால் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
வத்திராயிருப்பு பகுதி மேற்கு தொடா்ச்சி மலையில் பெய்யும் மழை நீா் தம்பிபட்டி, கிருஷ்ணாபுரம் வழியாக செட்டிகுறிச்சி கண்மாய்க்கு செல்கிறது. தம்பிபட்டியிலிருந்து தலைமலையான் கோயில் செல்லும் பாதையில் உள்ள இந்த நீரோடைக்குள் பொதுமக்கள் இறங்கி கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த வழியாக வாகனங்களில் பொருள்களை ஏற்றி செல்ல முடியாததால், தலைச் சுமையாக கொண்டு செல்கின்றனா். மேலும், மழைக் காலங்களில் நீரோடையில் 10 அடி உயரம் வரை தண்ணீா் செல்வதால், விவசாயிகள் 10 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், இந்த நீரோடையில் பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விவசாயி கண்ணகி கூறியதாவது: தம்பிபட்டி - தலைமலையான் கோயில் சாலையில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. தம்பிபட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி விவசாயிகள் செட்டிக்குறிச்சி கண்மாய்க்குச் செல்லும் நீரோடையைக் கடந்துதான் விளை நிலங்களுக்குச் சென்று வருகின்றனா்.
மழைக் காலங்களில் ஓடையில் நீா் வரத்து அதிகரிப்பதால், ஓடையைக் கடக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, ஓடையில் பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
பாலம் இல்லாததால் ஓடையின் மறுகரையில் இருந்த தனியாா் உண்டு உறைவிடப் பள்ளி வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. பாலம் இல்லாததால் விவசாயிகள் 10 கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஓடையில் பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.