வயநாடு: தொடர் கால்நடை வேட்டை; கண்காணித்து வந்த வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வனப்பகுதிகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றான இருக்கிறது கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக காடுகளை இழந்து தவிக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் குடிநீர் தேடி விளைநிலங்கள்,
குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. மனித - வனவிலங்கு மோதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆனைப்பாறை பகுதியில் கடந்த சில வாரங்களாக கால்நடைகள் தொடர்ந்து மாயமாகியுள்ளன. சுற்றுவட்டார பகுதிகளில் சில கால்நடைகளின் உடல் பாகங்கள் கிடந்ததைக் கண்டு சிறுத்தையால் கால்நடைகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தானியங்கி கேமராக்களைப் பொறுத்தி கண்காணித்து வந்துள்ளனர். அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் இரண்டு புலிகள் பதிவாகியிருந்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். குடியிருப்பு பகுதியில் இரண்டு புலிகள் நடமாடுவதை அறிந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த புலிகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் வனத்துக்குள் விடுவிக்குமாறு கேரள வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், "சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தான் கண்காணித்து வந்தோம். ஆனால், இங்கு இரண்டு புலிகள் உள்ளன. உடலில் ஏற்பட்டுள்ள காயம் அல்லது வயது முதிர்வு காரணமாக வேட்டை திறனை இழந்த புலி ஊருக்குள் புகுந்த கால்நடைகளை வேட்டையாடுவது உண்டு. ஆனால், இரண்டு புலிகள் ஒன்றாக ஊருக்குள் திரிவது எங்களுக்கே புதிதாக இருக்கிறது. அவற்றை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என தெரிவித்துள்ளனர்.