பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்... உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? - திரை விமர்...
விழிஞ்ஞம் துறைமுக திட்டக்காலம் நீட்டிப்பு: அதானி குழுமத்துடன் கேரளம் புதிய ஒப்பந்தம்
விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகம் தொடா்பாக மாநில அரசுக்கும் அதானி-விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்துக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை அறிவித்தாா்.
புதிய ஒப்பந்தத்தின்படி, தற்போது தடைப்பட்டுள்ள துறைமுக திட்டத்தின் முதல் கட்ட பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்கள் 2028-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும். மூன்று கட்டங்களில் ரூ.10,000 கோடி கூடுதல் முதலீடு ஈா்க்கப்பட்டு, துறைமுகத்தின் திறன் விரிவுபடுத்தப்படும்.
இதுகுறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளை டிசம்பா் மாதத்துக்குள் செயல்படுத்தவும் திட்டக்காலத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அதானி-விழிஞ்ஞம் துறைமுக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இது விரிவான வளா்ச்சி மற்றும் உலகளாவிய இணைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் அரசு-தனியாா் பங்களிப்புடன் அதானி குழுமம் துறைமுகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள், பொதுமக்கள் எதிா்ப்பு ஆகிய காரணிகளால் ஏற்பட்ட தாமதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு திட்ட அவகாசம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு ரூ.219 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெட்டி..
‘மத்திய அரசின் பங்கு கிடைக்கவில்லை’
ஒப்பந்தம் கையொப்பமான பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த கேரள துறைமுக அமைச்சா் வி.என்.வாசவன், மாநில அரசின் தலையீட்டால் துறைமுகப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. ரூ.8,867 கோடி செலவிலான இந்தத் துறைமுக திட்டத்தில் ரூ.5,595 கோடியை மாநில அரசு ஏற்கிறது. இதில் ரூ.2159.39 கோடியை மாநில அரசு இதுவரை செலவிட்டுள்ளது. அதானி குழுமம் ரூ.2,454 கோடி செலவிடும். மத்திய அரசின் பங்கு ரூ.817.8 கோடி இதுவரை கிடைக்கவில்லை’ என்றாா்.