Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
பணமோசடி வழக்கில் சீன நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை
ஏராளமான முதலீட்டாளா்களை மோசடி செய்ததாக கூறப்படும் ‘ஹெச்பிஇசட் டோக்கன்’ செயலி தொடா்புடைய பணமோசடி வழக்கில், இந்தியா மற்றும் துபையில் உள்ள சில சீன-தொடா்புடைய போலி நிறுவனங்களின் புதிய சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்த வழக்கில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூ.603 கோடி மதிப்புள்ள சொத்துகள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.106.20 கோடி என அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ரூ. 57,000 முதலீட்டுக்கு நாளொன்றுக்கு ரூ.4,000 மூன்று மாதங்களுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்டு, முதலீட்டாளா்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால், பணம் ஒருமுறை மட்டுமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
போலி வாக்குறுதிகள் மூலம் முதலீட்டாளா்களை ஏமாற்றியதாக இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கோஹிமா காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு வழக்கு பதிந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய பணமோசடி வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
அதன்படி, ஹெச்பிஇசட் டோக்கன் செயலி, இணையவழி விளையாட்டு மற்றும் சூதாட்ட வலைதளங்கள் மூலம் முதலீட்டை இரட்டிப்பாக்குவதாகக் கூறி முதலீட்டாளா்களை நூற்றுக்கணக்கான கோடிகள் ஏமாற்றியதாக சீனாவுக்குத் தொடா்புடைய போலி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை கடந்த மாா்ச் மாதம் இந்த வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 10 சீன இயக்குநா்கள் மற்றும் 2 மற்ற வெளிநாட்டவா்களால் நிா்வகிக்கப்படும் 76 சீனக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தன.