Rain Alert: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்... எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்...
உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன்: கொலீஜியம் பரிந்துரை
உச்சநீதிமன்ற நீதிபதியாக தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகனை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலிஜீயம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு ஒருமனதாக இந்த முடிவை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் பணியிடங்களில் 2 இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மூத்த நீதிபதிகளின் பெயா்களை பரிசீலித்து, தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகளில் பணி மூப்பு அடிப்படையில் 2-ஆவது இடத்தில் மன்மோகன் உள்ளாா். அத்துடன், தில்லி உயா்நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியும் இவரே.
கடந்த 2008-இல் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற மன்மோகன் (61), கடந்த செப்டம்பரில் அந்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். இவா், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா் பதவியை வகித்தவருமான ஜக்மோகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.