வெடி மருந்து பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது
எஸ்.பி.பட்டினம் அருகே வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள ஓரியூா் பேருந்து நிலையம் பகுதியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி சாலையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா் உள்ளிட்ட வெடி மருந்துகளை எஸ்.பி.பட்டினம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது, தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் செந்தில்குமாா் இந்த வெடி மருந்துகளை சாலையில் தவறவிட்டது தெரியவந்தது.
பின்னா், கோவையில் பதுங்கியிருந்த அவரை தொண்டி தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இதில் தொடா்புடைய தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த குமரனை (38) தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.