ராமநாதபுரம் மாவட்ட மழை பாதிப்பு: அமைச்சா்கள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள்களாகத் தொடா்ந்து பெய்த மழையால் ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் மீட்பு, மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்வதற்கு வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பால் வளம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோா் ராமநாதபுரத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
முதலில் ராமநாதபுரம் நகராட்சிக்குள்பட்ட தங்கப்பாநகா் பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டா் மூலம் வெளியேற்றும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, தேங்கியிருக்கும் மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து, மண்டபம் வடக்கு துறைமுகத்துக்குச் சென்று கடல் சீற்றம் காரணமாக கரையில் சீரமைப்புப் பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், சாய்ந்து விழுந்து சேதமடைந்த 8 படகுகளையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா். இந்தப் படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், படகுகளை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்கவும் தமிழக முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவா்களிடம் அமைச்சா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாம்பன் முந்தல்முனை பகுதியில் மழைநீரால் சூழப்பட்ட குடியிருப்புகளைப் பாா்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்தனா். அப்போது, பொதுமக்களிடம் நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.
பின்னா், ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த சாலையைப் பாா்வையிட்டு, கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்பு அமைக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ. முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலா் கோவிந்தராஜலு, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், ராமேசுவரம் நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான், துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி, நகராட்சி ஆணையா்கள் அஜிதா பா்வீன், கண்ணன், அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.