சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?
'15 ஆண்டுகளாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம்; எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா' - பரபரக்கும் போஸ்டர்
கடந்த செப்டம்பர் மாதம் 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களின் குடும்பத்தினரை இன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
இந்நிலையில், திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாகியிருக்கிறது. த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 27 -ம் தேதி நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த த.வெ.க-வின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் தெற்கு மாவட்ட துணை தலைவர் கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் இருவரின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு, 'வீர தேவேந்திர மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை' என்கிற பெயரில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில், இருவரின் ஆத்மாக்கள் பேசுவது போல் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

அதில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் உயிர் நீத்தோம். எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா. 15 ஆண்டு காலமாக உங்கள் பின்னால் அணிவகுத்தோம். எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா. கட்சி மாநாட்டிலும், பொது கூட்டத்திலும் கூட எங்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே விஜய் அண்ணா.
முதல் சுற்று பயணம் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தாயே விஜய் அண்ணா. அப்பொழுது எங்களுடைய உழைப்பில் முதல் வெற்றியை பெற்றீர்களே. அப்பொழுது கூட எங்களை மறந்து விட்டாயே விஜய் அண்ணா!. கரூர் துயர சம்பவத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தத்து பிள்ளையாக இருப்பேன் என்று உறுதி அளித்து உள்ளீர்களே விஜய் அண்ணா!. எங்கள் குடும்பம் எல்லாம் நடு ரோட்டில் கிடப்பதா விஜய் அண்ணா?. நீங்கள் மறந்தாலும் மேலும் மேலும் நீங்கள் உயர எங்களுடைய ஆத்மா வழி நடத்தும் விஜய் அண்ணா' என எழுதப்பட்டுள்ளது.
இருவரும் உயிரிழந்த போது அவர்கள் வீட்டிற்கு விஜய் சென்று சந்திக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தை நேரில் வரவழைத்து விஜய் இன்று சந்திக்கும் சூழலில் த.வெ.க நிர்வாகிகள் கலை மற்றும் சீனிவாசன் முதலாமாண்டு நினைவு நாளில் விஜயை விமர்சனம் செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















