ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
1993ல் கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் சேர்ந்ததன் பின்னணி?
நொய்டா: சிலர் விதிவசத்தால், தாங்கள் வாழ வேண்டிய நல்வாழ்வை தவறவிட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாவார்கள், அதுபோலவே நொய்டாவில் 1993ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுவன் 30 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்துள்ளார்.
ஜெய்சல்மெரில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை மீட்க தொழிலதிபர் ஒருவர் எடுத்த முன் முயற்சியால் பீம் சிங் இன்று அவரது வீட்டில் இருக்கிறார்.
ஜெய்சல்மேர் கிராமத்தில் கால்நடைப் பண்ணையில் இருந்த மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர்தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு நொய்டாவில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் பீம் சிங்.
1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிறுவனைக் கடத்திச் சென்றவர்கள், அவரது குடும்பத்தைத் தொடர்புகொண்டு பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை. காவல்துறையினரும் தங்கள் பங்குக்குத் தேடினார்கள். குடும்பத்தினரின் தேடுதல் பணியும் பலனளிக்கவில்லை.
காஸியாபாத்தைச் சேர்ந்த சிறுவன் கிடைக்கவேயில்லை. அவனது முகம் இந்த பூமியிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்தே போனது. அவரது குடும்பம் வேறு இடத்துக்கு மாறிச்சென்றது. ஆனால், அந்த சிறுவன் காணாமல் போனதன் வலி மட்டும் மாறவில்லை.
கடத்திச் சென்றவர்கள் பண்ணை முதலாளியிடம் சிறுவனை விற்றுவிட, ஆடு, மாடுகளுடன் சேர்ந்து பீம் சிங் வளந்தார். அவரது தந்தை ஓய்வுபெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் மகன் தொலைந்த இடத்திலேயே மாவு மில் தொடங்கி மகனை தேடி வந்தார். ஆனால் கிடைப்பார் என்ற நம்பிக்கை இருந்திருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். தேடியது என்னவோ, மனம் கொடுத்த வலியால்தான்.
ஆனால், கடந்த செவ்வாயன்று காஸியாபாத் காவல்நிலையத்தில் அவர்கள் சென்று பார்த்ததை அவர்கள் கண்களாலேயே நம்ப முடியவில்லை. அங்கே நின்றிருந்தது ஒரு இளைஞர். தான் அடைந்த துயரமும், துன்புறுத்தலும், கிட்டத்தட்ட இளைஞருக்கு தனது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக மறக்கவும் செய்திருக்கலாம். ஆனால், ராஜூ என்று ஒட்டுமொத்த குடும்பமும் அன்போடு அழைத்தது மட்டுமல்லாமல், அவரது கையில் பச்சைக்குத்தியிருந்தது, வலதுகாலில் இருந்த மச்சம் போன்றவற்றைக் கொண்டு அது தங்கள் ராஜூதான் என்பதை அடையாளம் கண்டனர்.
என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறை கூறுகையில், பீம் சிங், தொழிலதிபர் ஒருவர் எழுதிக்கொடுத்த பரிந்துரைக் கடிதத்துடன் வந்திருந்தார். அவரது குடும்பத்தைப் பற்றி சில தகவல்களை பீம் சிங் சொன்னார். கிராமத்தின் பெயர் நினைவில் இல்லை. ஆனால், தன்னை 1993ல் சிலர் கடத்திச் சென்றதாகக் கூறியதையடுத்து, காவல்நிலையத்தில் 1993ஆம் ஆண்டு வழக்கு ஆவணங்கள் தூசு தட்டப்பட்டன. அதில், பீம் சிங் காணாமல் போனது தொடர்பான முதல் தகவல் அறிக்கையும் இருந்தது.
அதைவைத்துத்தான் இப்போது பீம் சிங் குடும்பத்தினருடன் இணைந்துவிட்டார்.
கடந்த காலத்தைப் பற்றி அவர் கூறுகையில், எப்போதும் கால்நடைகளுடன் இருந்தவர் ஒரு நாளைக்கு ஒரு துண்டு ரொட்டியும் சில கப் தேநீர் குடித்துத்தான் உயிர் வாழ்ந்துள்ளார்.