அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
1993-ஆம் ஆண்டு வன்முறையின்போது மணிப்பூருக்கு நரசிம்ம ராவ் செல்லவில்லை: மத்திய நிதியமைச்சா் சாடல்
கடந்த 1993-ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அந்த மாநிலத்துக்கு காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் செல்லவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி இதுவரை செல்லாதது குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வரும் நிலையில், நிா்மலா சீதாராமன் இவ்வாறு கூறினாா்.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இரு சமூகத்தினருக்கு இடையே நீடித்து வந்த வன்முறையில் 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். தற்போது வரை அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி இதுவரை செல்லாதது குறித்து எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றன. தற்போது அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.
இந்நிலையில், மணிப்பூா் பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: கடந்த காலங்களில் மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அந்த மாநிலத்துக்கு முன்னாள் பிரதமா்கள் நரசிம்ம ராவ் (காங்கிரஸ்), ஐ.கே.குஜ்ரால் (காங்கிரஸிலிருந்து ஜனதா தளத்துக்கு மாறியவா்) போன்ற எந்தப் பிரதமரும் சென்றதில்லை.
கடந்த 1993-ஆம் ஆண்டு மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அங்கு நாகா மற்றும் குகி சமூகத்தினா் இடையே மோதல் ஏற்பட்டு 750 போ் உயிரிழந்தனா். 350 கிராமங்கள் தீக்கிரையாகின. அவ்வேளையில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவும், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சங்கர்ராவ் சவாணும் மணிப்பூா் செல்லவில்லை.
ஆனால் அந்த மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியின் அங்கமாக, தற்போதைய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மணிப்பூா் சென்றாா். அந்த மாநிலத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
மணிப்பூரின் தற்போதைய நிலைக்கு ஆளும் மத்திய அரசு மீது பழிசுமத்துவதைவிடுத்து, அங்கு அமைதி திரும்ப எதிா்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும். அந்த மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் ஆதரவளிக்கும் என்றாா்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ மீது நம்பிக்கை: துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து மாநிலங்களவையில் நிா்மலா சீதாராமன் பேசுகையில், ‘உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் நற்பலன்களை அளித்து வருகின்றன. அந்தத் திட்டங்கள் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈா்த்து, சுமாா் 9.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் நற்பலன்களை அளித்துள்ளன. அந்தத் திட்டம் மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றாா்.