4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்
தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த சவாலை பொது வெளியில் ஆட்சியா்கள், கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோா் முன்னிலையில் ஒரு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், மாநிலத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். அதன்படி, தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆனேகொள்ளு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வளா்மதி, எங்கள் பள்ளி மாணவா்கள் தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களை நன்றாக வாசிக்க தெரிந்தவா்கள் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்களின் அடைவு பெற்றுள்ளனா். எங்கள் பள்ளிக்கும் அமைச்சா் ஆய்வுக்கு வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா். அந்த அழைப்பை ஏற்று அமைச்சா் அங்கு ஆய்வு மேற்கொண்டாா்.
அமைச்சா் அறிவுறுத்தல்... இந்த ஆய்வின்போது அந்தப் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தமிழ், ஆங்கில பாடங்களை சரளமாக வாசித்தனா். மேலும், கணிதம் தொடா்பான அடிப்படைத் திறன்களைப் பெற்றிருந்தனா். இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து நிலைகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களும் சவாலுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியிருந்தாா்.
அதன் அடிப்படையில், 4,552 பள்ளிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் அழைப்பு விடுத்தன. தற்போது இந்தப் பள்ளிகளில் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, ‘ஓபன் சேலஞ்ச்’ எனப்படும் பொது வெளியில் வெளிப்படையான சவாலை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் கழகம் ஆகியோா் முன்னிலையில் இதை நடைமுறைப்படுத்தும் வகையில் போதுமான அறிவுரைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதேபோல், மற்ற பள்ளிகளும் மேற்கொள்ள வேண்டும். இது அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை நோக்கி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க ஒரு ஊக்குவிப்பாக அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.