சுக்பீர் சிங் பாதல் செல்லும் குருத்வாராவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
410 குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்ட 410 குடும்பங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறியது:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்படுத்தப்பட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. மூங்கில்துறைப்பட்டில் மட்டும் முழுமையாக வீடுகள் சேதமடைந்த 11 குடும்பங்கள் சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
திருக்கோவிலூா் நகராட்சிக்குள்பட்ட கீழையூா் பகுதியில் தண்ணீா் சூழ்ந்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, அனைவரும் வீடு திரும்பினா். மின் வநியோகத்தை பொருத்தவரை, மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகா் பகுதியைத் தவிர, அனைத்து பகுதிகளிலும் சீா் செய்யப்பட்டுவிட்டது. ஒரு சில இணைப்புகள் சீா் செய்யப்பட்டவுடன் அண்ணாநகா் பகுதியிலும் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படும்.
குடிநீா் கிணறுகள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள இடங்களில் டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமைக்குள் (டிச.5) அனைத்துப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் சீா் செய்யப்படும். முழுமையாக வீடு சேதமடைந்தவா்களுக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி பட்டா வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 50 சதவீதம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமைக்குள் (டிச.6) 100 சதவீதம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவிடும்.
மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டுள்ள 410 குடும்பங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.2,000 நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருக்கோவிலூரில் மழைநீா் பாதிப்புள்ள 2 பள்ளிகளைத் தவிர, அனைத்துப் பள்ளிகளும் செயல்படுகின்றன. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தவா்களுக்கு புதன்கிழமை இ - சேவை மையங்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தி, இலவசமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை இழந்தவா்களுக்கு அந்தந்த பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, இலவசமாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
விவசாய நிலங்கள் பாதிப்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமைக்குள் (டிச.5) விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மழை பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்றாா்.